பாடாய்படுத்தும் U - DISE பதிவேற்றம்... மன உளைச்சலில் தலைமையாசிரியர்கள்.!!!

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையான யு-டைஸ் பதிவேற்றத்திற்காக அதிக நேரம் தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் காத்திருக்கும் நிலை உருவாவதால் பெரும்பாலான தலைமையாசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த காலங்கள் போலவே ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் உரிய படிவங்களை அளித்து தரவுகளை திரட்டி ஒருங்கிணைந்த குறுவள மையம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை யு-டைஸ் (U-DISE - Unified District
Information System for Education) என்பது இந்தியாவில் உள்ள பள்ளிகளைப் பற்றிய ஒரு தகவல் தரவுத்தளம் ஆகும்.
இதுக்குறித்து பேசிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியனோ., " எமிஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னால் அனைத்து நடவடிக்கைகளும் இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர், மாணவர் வருகை, விலையில்லா பாடப்பொருட்கள் விநியோகம், மாணவர்களது கல்வி செயல்பாடுகள் என அனைத்தும் இணைய வழியே மேற்கொள்ளப்படுகிறது. இது வரவேற்க வேண்டிய மாற்றம் என்றாலும் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியில்லாத கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
80 சதவீதத்திற்கு மேல் பெண்களே தலைமையாசிரியர்களாக உள்ளதால் அவர்கள் நீண்ட நேரம் கம்யூட்டர் மையங்களில் காத்துக்கிடப்பதில் பல்வேறு பிரச்சணைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே கடந்த காலங்கள் போலவே ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் உரிய படிவங்களை அளித்து தரவுகளை திரட்டி ஒருங்கிணைந்த குறுவள மையம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment