ஜனவரியில் விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: மூன்றாம் பருவ பாடம் நடத்துவதில் சிக்கல்
ஜனவரியில் விடுமுறை நாட்கள் அதிகரித்த நிலையில், பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடத்தை நடத்தி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், இரண்டாம் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக ஜன., 2ல் திறக்க வேண்டிய பள்ளிகள், உள்ளாட்சி தேர்தலால், நாளை திறக்கப்படுகிறது. அத்துடன், பொங்கல் விடுமுறை வார நாளில் வருவதால், தொடர்ந்து, 10 நாள் வரை விடுமுறை விட வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால், மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தை நடத்தி முடிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.இதுகுறித்து, தலைமையாசிரியர் சிலர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில், 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.
அவர்களுக்கு, முதல் இரு பருவங்களுடன், மூன்றாம் பருவ பாடமும் சேர்த்து, தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். பிப்ரவரி முதல், பொதுத்தேர்வு செய்முறை தேர்வு, முன்னேற்பாடு உள்ளிட்ட பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவர். இதனால், பாடம் நடத்த, வேலை நேரம் குறையும். ஆண்டுதோறும், இதே சூழல் உருவானாலும், நடப்பாண்டு ஜனவரியில், விடுமுறை அதிகரித்ததால், நிலைமை சிக்கலாகியுள்ளது.
இதனால், பல பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை நடத்தாமலேயே கல்வியாண்டு முடிந்து விடும். இதனால், மாணவ, மாணவியர், அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது பாதிக்கப்படுவர். மாற்றாக, முப்பருவ கல்வி முறையை ரத்து செய்து, டிசம்பருக்குள் முழு பாடத்தை நடத்தி முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments
Post a Comment