Header Ads

Header ADS

குரூப் 4 தேர்வு முறைகேடு - முழு விபரம்



குரூப் 4 போட்டித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
  
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 4 பதவியில் (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், வரிதண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருந்த 9,398 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இத்தேர்வுக்கு பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்திருந்தனர். அதனால், விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 16.30 லட்சத்தை தொட்டது. தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. அதன் பிறகு நவம்பர் 12ம் தேதி 13 லட்சத்து 66 ஆயிரத்து 548 தேர்வர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். மேலும் அங்கு தேர்வு எழுதிய 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் உள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

சொந்த மாவட்டத்திலேயே தேர்வு மையங்கள் இருக்கும்போது இவர்கள் ஏன் இங்கு வந்து தேர்வு எழுதினர் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இங்கு ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
 
இதைதொடர்ந்து விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமேஸ்வரம், கீழக்கரை பகுதியில் தேர்வு மையங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சுமார் 100 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி விசாரணை தொடங்கியது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர்களிடம் பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டன. சொந்த மாவட்டத்திலேயே தேர்வு கூடங்கள் இருக்கும் போது ராமேஸ்வரம், கீழக்கரை மையத்தை ஏன் தேர்வு செய்தீர்கள் போன்ற விவரங்களை கேட்டனர். சம்பந்தமே இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள் என அவர்களிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, அதிகாரிகளே திகைக்கும் வகையில் விசாரணைக்கு வந்த தேர்வர்கள் பதில் அளித்தனர்.

இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரம் சென்றதாகவும். அதனால் அங்கேயே தேர்வு எழுதி விட்டு வந்ததாகவும் கூறினர். தேர்வர்கள் சொல்லி வைத்தார்போல் ஒரே மாதிரியாக பதில் அளித்ததால் சந்தேகம் மேலும் வலுத்தது. அவர்களுக்கு புதிய வினாக்கள் தயாரிக்கப்பட்டு விசாரணையின் போது தேர்வு நடத்தப்பட்டது. அதில் அவர்கள் பெற்ற மதிப்பெண்ணும், ஏற்கனவே, டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் நிறைய வித்தியாசங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் எந்தவழியில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பது கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
 
இதை தொடர்ந்து குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிஜிபி ஜாபர்சேட் தலைமையில், எஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் விசாரணையில், தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து விட்டு புதிய ரேங்க் பட்டியலை வெளியிடவும் டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்தது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி மற்றும் ஜனவரி 2ம் தேதி டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரைக்கு நேரில் சென்று, தேர்வு மையங்களில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய வெளி மாவட்டங்களை சேர்ந்த 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத தடை விதித்து டிஎன்பிஎஸ்சி நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்த முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தாசில்தார்கள் பார்த்தசாரதி மற்றும் வீரராஜ் உட்பட 15 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் ஒருவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து, அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே 99 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம், கீழக்கரை தாலுகா மையங்களில் சில தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு தவறான முறையில் அதிகமான மதிப்பெண் பெற்றது தெரியவந்துள்ளது. தேர்வாணையத்தின் உதவி செயலாளர் பாலசுப்பிரமணியம் கொடுத்த புகாரின்படி, சட்டப்பிரிவு 120(), 120(பி), 121, ரெட் வித் 464, 466, 468, 470, 471, 481, 482, 484, 485, 487, 488 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் பொறுப்பில் இருந்த சில அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.




இந்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த, டிபிஐயில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் (39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த திருக்குமரன் (35), தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (21) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இடைத்தரகர்கள் மற்றும் முக்கிய குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் கீழக்கரை, ராமேஸ்வரம் தவிர மற்ற இடங்களில் முறைகேடுகள் நடைபெற வில்லை என்றும் தெரியவந்தது என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே, 99 பேர் தகுதி நீக்கம் தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:

குரூப் 4 தேர்வு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. 16,29,865 பேருக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. 24,260 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி சமூக வலைதளங்களிலும் பிறகு ஊடகங்களிலும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக தெரிவாகியுள்ளதாக செய்தி வெளிவந்தது.

இதையடுத்து தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும் தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததாகவும் தெரிய வந்தது.

மேலும் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்தது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.




இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களைத் தலஆய்வு செய்தும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் தவறுகள், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இந்த மையங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் வேறு எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 99 பேர் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* எழுத்துக்கள் அழியும் பேனாவை பயன்படுத்தினர்

குரூப் 4 தேர்வை எழுத இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் 99 பேரும் கீழக்கரை, ராமேஸ்வரம் தேர்வு மையத்தை தேர்வு செய்துள்ளனர். தேர்வுக்காக தேர்வர்கள் இடைத்தரகர்கள் வழங்கிய நவீன பேனாவை கொண்டு சென்றுள்ளனர்.

அதாவது, அந்த பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுதினால், சில மணி நேரங்களில் அவர்கள் எழுதிய எழுத்துக்கள் அனைத்தும் அழிந்து விடும். அந்த வகையில் அந்த பேனாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், புரோக்கர்களிடம் பணம் வாரி இறைத்த தேர்வர்கள், தேர்வுக்கு படிக்காமல், அவர்கள் கண்டபடி விடையை எழுதி விட்டு சென்றுள்ளனர்.

அதன் பிறகு இடைத்தரகர்கள் தேர்வு கூட பணியில் இருந்தவர்களின் உதவியை நாடியுள்ளனர். அவர்கள் ஒத்துழைப்புடன் மீண்டும் புரோக்கர்களை நம்பி தேர்வு எழுதியவர்களின்ஆன்சர் ஷீட்டைஎடுத்து சரியான விடையை நிரப்பியுள்ளனர். அதன் பின்னரே எதுவுமே நடைபெறாதவாறு விடைத்தாள் கட்டுகளில் இந்த விடைத்தாள் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைத்து திருத்தி ரிசல்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
 
* சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 65 பேர் தகுதி நீக்கம்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 தேர்வர்களில் 65 பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இடைத்தரகர் மூலமே இம்முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

* தமிழகம் முழுவதும் ரெய்டு

கடலூர் சிபிசிஐடி போலீசார் உள்ளூர் போலீஸ் உதவியுடன் பண்ருட்டி, சிறு கிராமம் ஆகிய 2 பகுதிகளுக்கு நேற்று விரைந்தனர். பின்னர், முறைகேடுகளில் தொடர்புடைய 2 வீடுகளிலும் ஆய்வு நடத்தினர். இதில் ஏஜென்டிடம் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவரை கைது செய்தனர். மற்றொருவர் வீட்டில் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக ராணிப்பேட்டை அருகே உள்ள ஆரணிக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.