GIMS App - வாட்ஸ்அப், டெலிகிராமிற்கு பதிலாக மத்திய அரசின் ஆப் வருகிறது!!
மத்திய அரசு வாட்ஸ்அப், டெலிகிராம் போன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ள தனக்கென பிரத்யேகச் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது. இதற்கு ஜிம்ஸ் (Government Instant Messaging
System, GIMS) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தச் செயலியானது ஒடிசா போன்ற சில மாநிலங்களில் சோதனைக் கட்டத்தில் இருக்கிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் கணக்குகளை `பெகாஸஸ்' என்னும் ஸ்பைவேர் உளவு பார்த்தது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகளவில் 1,400 வாட்ஸ்அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டன.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 121 முக்கிய நபர்களின் கணக்குகள் அடங்கும். இன்று அலுவலக வேலைகள் தொடங்கி அனைத்துமே வாட்ஸ்அப்பில்தான் என்பதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
கேரளாவில் உள்ள தேசியத் தகவலியல் மையத்தில் (National Informatics Centre) இந்தச் செயலியின் உருவாக்கமும் ஆராய்ச்சியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை அலுவலகங்களில் தொலைபேசி தொடர்புக்காக மட்டுமே பிரத்யேக இன்டர்காம் வசதி இருந்துவந்தது.
ஆனால், இன்றைய இணைய உலகத்தில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பெரும்பாலும் இதர நாட்டுச் செயலிகளையே நாட வேண்டியதாக இருந்தது. இதையடுத்து இந்திய அரசானது, மத்திய அரசு அலுவலகங்களிலும் மாநில அரசு அலுவலகங்களிலும் தங்களுக்குள் தகவல்கள் பரிமாற்றத்திற்கென இந்த ஜிம்ஸ் ஆப்பை உருவாக்கி வருகிறது.
இதன்மூலம் வெளிநாட்டு ஆப்களால் ஏற்படும் தகவல் திருட்டு மற்றும் ஊடுருவலைத் தடுக்கமுடியும் என்பதே இதன் முக்கியக் காரணமாகும். இதிலும் வாட்ஸ்அப் ,டெலிகிராம் போன்று எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end-encryption) முறையில்தான் தகவல்கள் பரிமாறப்படும்.
ஜிம்ஸ் ஆப்பானது இந்தியாவிலேயே உருவாக்கப்படுவதால் மிகுந்த பாதுகாப்பான செயலியாகக் கருதப்படுகிறது. முதன் முதலில் இதன் சோதனைப் பயன்பாடானது தேசியத் தகவலியல் மையத்தில் பணிபுரியும் பணியாளர்களிடையே உட்தகவல் பரிமாற்றத்திற்காக நடத்தப்பட்டது. பின்னர், இது ஒடிசாவின் நிதித்துறையிலும் தற்போது கப்பல் படையிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதுபற்றி அரசாங்க அதிகாரிகள் கூறுகையில் "ஜிம்ஸ் போர்டல் ஒன்றையும் இதனுடன் கூடுதலாக உருவாக்கி வருகிறோம். இது செயலியை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் பயன்படும்" என்றார். இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வெளியான இந்தச் செயலியை ஆப்பிளில் ஐஓஎஸ் 11-க்கு மேலான இயங்குதளங்களில் இயங்கும் சாதனங்களில் பயன்படுத்தலாம்.
மேலும் ஆண்ட்ராய்டில் கிட்காட் (android 4.4.4) மற்றும் அதற்கடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களிலும் பயன்படுத்தலாம். ஒடிசாவில் நிதித்துறையில் வேலை செய்யும் அரசு பணியாளர்கள் செப்டம்பர் மாதமே இந்தச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
தற்போது ஜிம்ஸைப் பயன்படுத்தி அலுவலகத்தில் பணிபுரிவோரிடம் தனிநபர் தகவல்களையும், குழு தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். இதனுடன் மேலதிகாரிகளுடன் பணி சம்பந்தமான ஆவணங்களையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ள பிரத்யேக வசதியும் இதில் உள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல் பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லை என்னும் அளவுக்குப் பிரச்னைகள் டெக் உலகைச் சூழ்ந்திருக்கிறது. இப்படியான சூழலில் இப்படி வெளிநாட்டு நிறுவனங்களைச் சாராமல் இருக்கவேண்டும் என்று எடுக்கப்பட்டிருக்கும் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கதுதான்.
ஜிம்ஸ் அரசு துறைகளில் எப்படியான மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அரசு கையில் இருந்தாலும் இதில் போதிய பாதுகாப்பு வசதிகள் இருக்கவேண்டியதும் அவசியம்.
No comments
Post a Comment