ஆசிரியர்,அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடு! 4 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல்!
தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு துறைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பது குறித்து அரசின் கவனத்துக்கு சென்றது. இந்த ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய கடந்த 2011-ல் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், அரசு ஊழியர் சங்கங்களின் கருத்துகளை அறிந்து அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அந்த பரிந்துரைகளை அமல்படுத்த முடிவு செய்து, தமிழக அரசு கடந்த 2013 ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த
வழக்கின் தீர்ப்பு கடந்த நவம்பர் 28-ம் தேதி வெளியானது. அப்போது, ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய குழு அமைக்க உத்தரவிட்டது. இதை ஏற்ற தமிழக அரசு, தற்போது, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் கே.பணீந்திரரெட்டி, ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அரசின் 20 துறைகளை சேர்ந்த 52-க்கும் மேற்பட்ட தர ஊதியங்கள் அடிப்படையிலான ஊதிய முரண்பாடுகள் குறித்து புதிய பரிந்துரைகளை அரசுக்கு இந்த குழு அளிக்க வேண்டும் என்றும்,சங்கங்கள், தனிநபர்கள் சார்பில் முந்தைய ஒருநபர் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை மீண்டும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் புதிய முடிவு எடுக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் முடிவுகளையும் முழுமையாக மீண்டும் ஆய்வு செய்து புதிய பரிந்துரைகளை 4 மாதங்களுக்குள் அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்தஅரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment