Header Ads

Header ADS

மாணவர்கள் கற்கும் வழியறிந்து ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்


Image result for மாணவர்கள்


மாணவர்கள் கற்கும் வழியறிந்து ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்: மாவட்டக் கல்வி அலுவலர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை மூன்று ஒன்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்புப் பயிற்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் மாவட்டக் கல்வி அலுவலர் .சீனிவாசன்.
 
ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.4: குழந்தைகள் நாம் கற்பிக்கும் முறையில் கற்கவில்லை என்றால், அவர்கள் கற்கும் வழியறிந்து அந்த குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் .சீனிவாசன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில், தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு 5 நாள் பயிற்சியை திங்கள்கிழமை தொடங்கி வைத்து மாவட்டக் கல்வி அலுவலர் சீனிவாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
குழந்தைகள் நாம் கற்பிக்கும் முறையில் கற்கவில்லை என்றால், அவர்கள் கற்கும் வழியறிந்து அந்த குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
ஆசிரியர்களின் கற்பித்தல், மாணவர்களின் பன்முகத் தன்மையைப் புரிந்து கொள்ளவும், மறுமுறை மீள்பார்வை கொள்ளவதும், புதிய பொருந்தக் கூடிய அணுகுமுறை அனைத்து மாணவர்களுக்கும் உதவக் கூடியதாகவும் அமைய வேண்டும்.



ஆராய்ச்சி மற்றும் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்களுக்குப் பல்வேறு கற்றல் தேவைகளை அதே வகுப்பறையில் நிறைவேற்ற வேண்டும்.
தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005 ன் முக்கிய நோக்கம், மாணவர்களைத் தாமாகவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்குதல், மற்றவர்களின் உணர்வுகளையும் நலன்களையும் உணர்ந்து செயல்பட வைத்தல், பொருளாதார மற்றும் சமூக மாற்றச் செயல்பாடுகளில் மாணவர்கள் தாங்களே ஈடுபடும் வகையில் அவர்களை மேம்படுத்துதல் ஆகும்.
இந்தியா எண்ணற்ற மண்டல மற்றும் பலதரப்பட்ட உள்ளூர் கலாச்சாரத்தினால் பலவகையான உருவாக்கப்பட்ட சமூகதத்தைக் கொண்டது. இந்திய மக்களின் மத நம்பிக்கைகளும், வாழ்க்கை முறைகளும், சமூக சூழல்களும் ஒருவர்கொருவர் மாறுபடுகிறது. அனைத்து பிரிவினருக்கும் சம காலத்தில் வாழவும், வளங்களைப் பெறவும் உரிமை உள்ளது. நமது சமூகத்தில் பொதிந்துள்ள உள்ளூர்சார்ந்த கலாச்சார பன்மைத்துவத்திற்கு ஏற்றவாறு கல்வி அமைப்புகளின் தேவைகள் இணக்கமான வகையில் அமைய வேண்டும்.



இந்திய அரசின் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய அளவில் நாடுமுழுவதும் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்காக நடத்தும் இந்த 5 நாள் பயிற்சியை முறையாக பயன்படுத்தி அரசின் நோக்கம் நிறைவேற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டார்.
தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஒன்றியங்களைச் சேர்ந்த 487 ஆசிரியர்களுக்கு இப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முன்னதாக உயர் தொடக்க நிலை வகுப்புகளுக்கு கற்றுத் தரும் 300 ஆசிரியர்களுக்கு இரு கட்டங்களாக இப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி தொடக்க விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கி.சீனிவாசன், கோ.விஜயலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.