Header Ads

Header ADS

ஆசிரியர்களின் புது முயற்சி - ஆச்சரியப்படுத்தும் அரசுப்பள்ளி...!



 
சென்னை பல்லாவரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பாடத்தோடு சேர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் கற்றுத் தருவதால் மாணவர்கள் ஆர்வத்தோடு பயின்று வருகின்றனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

போதிய மாணவர் சேர்க்கை இல்லாத அரசு பள்ளிகள் நூலகங்களாக மாறி வரும் சூழலில், 630 மாணவர்களோடு செயல்பட்டு வருகிறது, சென்னை பல்லாவரத்தில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி.

இந்த அரசு பள்ளியை சுற்றி அருகிலேயே பல தனியார் பள்ளிகள் இருந்தபோதிலும், இந்த பள்ளியில் கற்றுத்தரும் ஆசிரியர்களின் முயற்சியால் பெற்றோர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளிகளை விட, இந்த அரசு பள்ளியில் சேர்ப்பதை அதிகம் விரும்புகின்றனர். அதன் காரணமாக இந்த ஆண்டு இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் 96 குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.
 
இந்த பள்ளியில் வழக்கமாக கற்றுத் தரப்படும் பாடங்களோடு நிறுத்தி விடாமல், நடனம் மற்றும் கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இத்தோடு மாணவர்களின் மன வலிமையை அதிகப்படுத்த, தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் போன்றவையும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்காக அங்குள்ள ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த பணத்தை பங்கிட்டு வெளியிலிருந்து ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து இந்த கலைகளை கற்றுக் கொடுக்கின்றனர்.

தரமான கல்வியோடு சேர்ந்து, பலவிதமான நற்பண்புகளையும், மாணவர்களின் உடல் நலத்திற்காக தற்காப்பு கலைகளையும் சொல்லிக் கொடுப்பதால் தனியார் பள்ளிகளை விட இந்த அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகள் படிப்பதையே தாங்கள் விரும்புவதாக பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு குழந்தைகளின் தனி திறமையும் கண்டறியப்பட்டு அந்த மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கு பிடித்தமான கலைகளை பாடத்தோடு சேர்ந்து கற்றுத் தருவதால் மாணவர்கள் ஆர்வத்தோடு படிப்பிலும் கவனம் செலுத்துவதாக கூறுகிறார்

விளையாட்டுகளை கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளுக்கு, அப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டு, அம்மாணவர்கள் பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளனர்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பாடம் நடத்துவதோடு தங்கள் கடமை முடிந்தது என்று எண்ணாமல், அந்த மாணவர்களுக்குள் இருக்கும் தனித் திறமைகளை வெளிக் கொண்டுவரும் வகையிலும் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு முயற்சிகளை எடுக்கும் இப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள்.

இதே போன்று அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்க முன்வந்தால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதோடு, பல சாதனையாளர்கள் உருவாக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.