ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுப் பணி வழங்க அரசு முடிவு?
தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் விகிதத்தை விட, 12 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளதால், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துஉள்ளது.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனித்தனி விதிகள் பின்பற்றப்படுகின்றன. தொடக்க பள்ளிகளுக்கு, ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர் எண்ணிக்கைக்கு விகிதத்துக்கு ஏற்ப, ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
நடுநிலை முதல் மேல்நிலை பள்ளிகள் வரையிலும், மாணவர் எண்ணிக்கை மட்டுமின்றி, பாட வாரியாகவும் கணக்கிட்டு, ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பள்ளிகளில், நிரந்தர பணி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிகள், பாட வாரியாக மற்றும் வகுப்புகள் வாரியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தின் படியும், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும், 12 ஆயிரம் ஆசிரியர்கள், தேவைக்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதால், ஆசிரியர்களின் தேவை குறைந்து, ஆசிரியர்கள் உபரியாக இருப்பது அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். உபரி ஆசிரியர்களால், அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது.
எனவே,
செலவை ஈடுகட்டும் வகையில், இந்த ஆசிரியர்களை, பள்ளி கல்வியின் நிர்வாக பணிகள், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் உள்ளிட்டவற்றில், மாற்று பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோல, ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள ஆசிரியர்களுக்கு, வி.ஆர்.எஸ்., என்ற விருப்ப ஓய்வு திட்டம் வர உள்ளது. திருச்சியில், விளையாட்டு துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன், இதை அறிவித்துள்ளார். பள்ளி கல்வியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டு, சுய விருப்பத்துடன் ஓய்வுபெற விரும்பினால், அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என, தெரிகிறது. இதற்கான உத்தரவு, விரைவில் வர உள்ளது.
No comments
Post a Comment