Header Ads

Header ADS

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? -ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து


Image result for கல்வியாளர்கள் கருத்து

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு சரியா, அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வும் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வும் நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இதற்கு நாடு முழுவதும் 24 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து சட்டத்தை அமல்படுத்தின. இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசும் முடிவு செய்தது. இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அறிவித்தார்.

இதற்கிடையே மத்திய அரசின் ஆணைப்படி, நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செப். 13-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்தே விமர்சனம் எழுப்பப்படும் சூழலில் இந்தத் தேர்வுகள் சரியா என்பது குறித்துக் கடுமையான விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

படிக்கும் 8 ஆண்டுகளுக்குள் 5 பொதுத் தேர்வுகள் என்பதும் 10 வயதில் ஒரு சிறுவனோ, சிறுமியோ பொதுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் எப்படிப் புரிந்துகொள்வது?



உமா மகேஸ்வரி, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்
தேர்வு என்றாலே வடிகட்டல் என்றுதான் அர்த்தப்படுத்த வேண்டியதாகி விட்டது. அதிலும் பொதுத் தேர்வு மாணவர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. 10-ம் வகுப்பில் நடந்தது இனி 5-ம் வகுப்புக் குழந்தைக்கே நடக்கப் போகிறது. புதிய கல்விக் கொள்கையின் கருத்துக் கேட்பு பரிசீலிக்கப்படாமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நமது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.


தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்வு என்றாலே மனப்பாடம் என்ற நிலைதான் பெரும்பாலும் உள்ளது. படைப்பாற்றலை ஊக்குவிப்பது மிகக்குறைவே. பொதுவாக குழந்தைகளின் அடிப்படைத் திறன்களை கல்வி அதிகரிக்கச்செய்யவேண்டும். எழுதுதல், வாசித்தல், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றை வளர்க்க வேண்டும். அவை முறையாக நடக்கிறதா?

எப்போது குழந்தையாக இருக்கும்?
அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி ஆசிரியர்களை நியமிப்பது, இருக்கும் ஆசிரியர்களை கவனிப்பின் கீழ் கொண்டு வருவது ஆகியவை சரியாக இருந்தால் பொதுத் தேர்வுகள் குறித்து இத்தனை கவலைப்பட வேண்டியதில்லை. அதை அரசு செய்திருக்கிறதா? என்னைப் பொறுத்தவரையில் தேர்வு முறைக்குப் பதிலாக மதிப்பீட்டு முறையே சரியாக இருக்கும்.

அதேபோல ஒரு குழந்தைக்கு 5-ம் வகுப்பில் பொதுத் தேர்வு என்றால் 3-ம் வகுப்பில் ட்யூஷன் படிக்க அனுப்பப்படும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும். 8 வயதுக் குழந்தை பொதுத் தேர்வுக்குத் தயாரானால் அது எப்போது விளையாடும்? கேள்வி கேட்கும்? எப்படி சிந்திக்கும்?, முதலில் எப்போது குழந்தையாக இருக்கும்?

பேராசிரியர் மாடசாமி, கல்வியாளர்
'வகுப்பறைக்குள் நுழைந்த முதல் வன்முறை- தரம்' என்பார் டால்ஸ்டாய். பரீட்சையும் பாடப்புத்தகங்களும்தான் பெரும்பாலான குழந்தைகளை பள்ளியை விட்டுத் துரத்துகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளை. அறிவொளி இயக்கத்தில் இருந்தபோது விருதுநகரில் இருந்த ஒவ்வொரு தீப்பெட்டி அலுவலகத்துக்கும் செல்வோம். பள்ளிக்குச் செல்லாமல் அவர்கள் குழந்தைத் தொழிலாளிகளாக வேலை செய்யக் காரணமே தேர்வுகள்தான். வறுமை மேலோட்டமான காரணமாகவே இருந்தது.

பள்ளிகள் படிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படவில்லை. குழந்தைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்டன. இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சம் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். இதில் 70 ஆயிரம் பேர் பெண் குழந்தைகள். அவர்கள் அனைவரும் பாலியல் தொழிலும் பிச்சை எடுக்கவுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அதன் பிறகுதான் 2010-ல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அரசு கொண்டு வந்தது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் அதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிராமத்தினரையும் மலைவாழ் மக்களையும் கருத்தில் கொள்ளாமலேயே புதிய கல்விப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழைக்குழந்தைகளின் கனவு பறிபோகும்.

பூதத்தை விட தோல்வி பெரியது

குழந்தைகளைப் பொறுத்தவரை பூதத்தை விட தோல்வி பெரியது. அதை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. அடுத்த ஆண்டு மாணவர்களுடன் அவர்களால் சேர்ந்து படிக்க முடியாது. இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழல்கூட உருவாகலாம். இதன்மூலம் குழந்தைக் கடத்தல் அதிகரிக்கும். அரசு இதைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

மகாலட்சுமி, அரசுப்பள்ளி ஆசிரியை
''பேசிப் பேசி ஓய்ந்துவிட்டோம். எதற்குப் போராடுவது என்று திணற வேண்டிய சூழல் நிலவுகிறது. புதிதாக 5,8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதில் நடுத்தர, உயர்தர மக்களைவிட மலைவாழ் மக்களும், கடற்கரையோரங்களில் வசிப்பவர்களுமே அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இப்போதுதான் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை உடனே மறுப்பது எவ்வகையில் நியாயம் ஆகும்?

ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால், 30 பேர் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. மீதமுள்ள 20 பேரில் 10 பேருக்கு அதிக அக்கறை கொடுத்தால் மேலே கொண்டு வந்துவிடலாம். மீதி 10 பேரின் நிலைதான் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. 3-ம் வகுப்பு படிக்கும் திவ்யா என்னும் மாணவி எங்களின் உண்டு, உறைவிடப் பள்ளியில் தங்கிப் படிக்கிறாள். அவளுக்கு எழுத்துகள் சரியாகத் தெரியாது, தயங்கித் தயங்கித்தான் பேசவே செய்வாள். சில குழந்தைகளுக்கு 10 வயதுக்கு மேல்தான் புரிந்துகொள்ளும் தன்மை அதிகமாகும். 5-ம் வகுப்பிலேயே அவர்கள் தோல்வியை எதிர்கொண்டால் என்ன ஆகும்? என்னால் யோசித்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இதை இன்னொரு விதமாகவும் அணுகலாம். விடலைப் பருவத்தில் மாணவர்களுக்கு சில உளவியல் சிக்கல்கள் ஏற்படும். 'படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்; ஆனால் முடியவில்லை' என்பார்கள். அதை இந்தத் தேர்வு முறை எப்படி முறைப்படுத்தும்? நானே 8-ம் வகுப்பு வரை கணிதத்தில் தேர்ச்சி பெறாதவள்தான். இன்று ஆசிரியராக குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறேன்.

இடைநிற்றல் அதிகமாகும்

பொதுத் தேர்வுகளின் மூலம் இடைநிற்றல் அதிகமாகும், இதன்மூலம் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்க வேண்டுமா? மலைவாழ் பெண் குழந்தைகளுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள், குழந்தைத் திருமணங்களுக்கும் அதனால் பிறக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகளுக்கும் உங்களின் பதில் என்ன?'' என்கிறார் மகாலட்சுமி.

தேர்வு குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித் துறையோ, ''மாணவர்களின் அடிப்படை கற்றலிலுள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு மாற்றி விடுவதால், கற்றல் முறையில் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்க அரசுத்தரப்பில் சில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, இதுகுறித்துப் பேச விரும்பவில்லை என்றனர்.

மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்பார் காந்தி. கிராமங்களில் வாழும் இந்தியாவை, அதன் மாணவர்களை, சரியான வழியில் வளர்த்தெடுப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாய கடமை. அதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டியது இப்போதைய அவசர, அவசியம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.