ஒரே ஒரு மாணவன் படிக்கும் அரசுப்பள்ளியை மூட, கல்வித்துறை உத்தரவிட்டும், மாணவனின் பெற்றோர் டி.சி., வாங்க மறுப்பதால், சிக்கல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 14, 2019

ஒரே ஒரு மாணவன் படிக்கும் அரசுப்பள்ளியை மூட, கல்வித்துறை உத்தரவிட்டும், மாணவனின் பெற்றோர் டி.சி., வாங்க மறுப்பதால், சிக்கல்



அவிநாசி அருகே, ஒரே ஒரு மாணவன் படிக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை மூட, கல்வித்துறை உத்தரவிட்டும், மாணவனின் பெற்றோர் டி.சி., வாங்க மறுப்பதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே, பெரியநாதம்பாளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. கடந்த, 1954ல், அங்குள்ள கோவில் மண்டபத்தில் துவங்கப்பட்ட இப்பள்ளி, 1960ல், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. துவக்கத்தில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்தனர்.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், மாணவர் எண்ணிக்கை, 30 ஆக சரிந்தது. இந்த கல்வியாண்டில், முதல் வகுப்பில், ரோகித் என்ற ஒரு மாணவன் மட்டும் சேர்ந்துள்ளார். ஒரு மாணவனுக்கு, ஒரு தலைமையாசிரியை, ஒரு சமையலர் உள்ளனர்.
 
இப்பள்ளியை மூடுவதற்கு, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியை, அவிநாசி அருகேயுள்ள கருவலுாரில் உள்ள அரசுப்பள்ளிக்கு, மாற்றுப்பணி அடிப்படையில், பணியிட மாற்றம் செய்ய உத்தரவும் வழங்கப்பட்டது.மாணவன் ரோகித்துக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுப்பதற்காக, தலைமையாசிரியை பிரேமலதா, மாணவனின் பெற்றோரை அழைத்துள்ளார். பள்ளிக்கு வந்த மாணவனின் தந்தை சிட்டிபாபு, மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்ததோடு, பள்ளி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். அவருக்கு ஆதரவாக ஊர் மக்கள் சிலர் வந்தனர்.அவர்கள் கூறுகையில், '60 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியில், மாணவர் சேர்க்கையை அதிகரித்து, பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும். பள்ளியை மூட விடமாட்டோம்' என்றனர். இதனால், பள்ளியை மூடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர், 'மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்; எனவே, பள்ளியை மூடும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்' என்று, கலெக்டரிடம் மனு வழங்கியுள்ளனர்.

No comments: