அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்: முதல்வர் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, July 9, 2019

அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்: முதல்வர்



அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவர் திங்கள்கிழமை படித்தளித்த அறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நிகழாண்டில், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கணினி அறைகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கென கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளங்கள் அமைத்தல் போன்ற பணிகள் ரூ.163.45 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.பள்ளிக் கல்வித் துறையில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாடத் திட்டங்களுக்கு ஏற்ற வகையில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

கண்காணிப்பு கேமராக்கள்: தமிழகத்திலுள்ள 2 ஆயிரத்து 650 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் வீதம், ரூ.21.71 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் வசதி ஏற்படுத்தித் தரப்படும். இந்தத் திட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகள், மாணவியர் பள்ளிகள், தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஷூ - சாக்ஸ்: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் காலணிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலாக வரும் கல்வியாண்டில் ஷூ மற்றும் சாக்ஸ் அளிக்கப்படும். இதனால், 28.64 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.முன்மாதிரி கல்லூரிகள்: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இதனை மேலும் பல கல்லூரிகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 10 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் பெறுவதற்கு உரிய வகையில் ரூ.54 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கான நிர்வாக கட்டடத்துடன், சென்னை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்ககத்துக்கான அலுவலகக் கட்டடம் சென்னை சைதாப்பேட்டையில் கட்டப்படும். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி,ராஜபாளையத்தில் உள்ள ராஜூஸ் கல்லூரி ஆகியன முன்மாதிரி கல்லூரிகளாக மேம்படுத்தப்படும்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

No comments: