3,279 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - CEO அதிரடி உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் தேர்ச்சி சதவீதம் குறைந்ததன் அடிப்படையில், 3,279 ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு 17ஏ நோட்டீஸ் முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பி உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மணவர்களின் கற்றல் அடைவுத்திறனை கண்டறிய தேர்வு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், மாணவர்களின் தரவரிசை பட்டியலிடப்படுகிறது.அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 1,443 அரசு தொடக்கப்பள்ளிகள், 355 நடுநிலைப்பள்ளிகள், 217 உயர்நிலைப்பள்ளிகள், 167 மேல்நிலைப்பள்ளிகள் உள்பட 2,182 பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் தேர்வு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் கடந்த கல்வி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டது.
தொடக்கப்பள்ளிகளில் 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 77,606 மாணவர்களும், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 71,139 மாணவர்களும் இந்த தேர்வில் பங்ேகற்றனர்.
தமிழ் வாசித்தல் மற்றும் எழுதுதல், ஆங்கிலம் வாசித்தல் மற்றும் எழுதுதல், எளிய கணிதம், கடின கணிதம் ஆகிய 6 அடிப்படை திறன்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் அடிப்படையில், கற்றல் திறன் குறைந்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.மேலும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அடிப்படையாக கொண்டு, நீலம், பச்சை, மஞ்சள், ரோஸ், சிவப்பு என ஐந்து வண்ணங்களில் தரவரிசை பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை கற்றல் அடைவுத்திறன் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள வகுப்புகளின் ஆசிரியர்கள் ரோஸ் மற்றும் சிவப்பு வண்ண தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். எனவே, இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு 17ஏ நோட்டீஸ் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.அதில், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படவும், மாவட்டத்தின் கல்வித்தரத்தை மாநில அளவில் உயர்த்தவும் பள்ளிக்கல்வித்துறை மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்காக, ஆசியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம், மீளாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், அடைவுத்திறன் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தபோது, கற்பித்தலில் பின்னடைவு இருப்பது தெரியவந்தது.
எனவே,
டி மற்றும் இ கிரேடு தரநிலையில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் முன்னேற்றத்தில் ஈடுபாட்டுடன் செயல்படவில்லை என்பதால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுவதாக அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை கற்பிக்கம் 1,747 ஆசிரியர்கள், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் 1,532 ஆசிரியர்கள் உள்பட ெமாத்தம் 3,279 ஆசிரியர்களுக்கு, மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.மேலும், நோட்டீஸ் பெற்ற 15 நாட்களுக்குள் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், 3,279 ஆசிரியர்களுக்கு அதிரடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், அடைவுத்திறன் தேர்வில் பங்கேற்காத, விடுமுறையில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து கணக்கிட்டு, தரவரிசை பட்டியல் தயாரித்திருப்பதால், இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்
No comments
Post a Comment