கல்வித் துறையை சீர்படுத்துங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
உயர்கல்வியில் சேரும்போது, மாணவர்கள் எந்தவிதப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளாதவாறு, கல்வித் துறையை சீர்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் சேர பல்வேறுசந்தேகங்கள் நிலவுவதால், தங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில்உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மாணவர்களின் நிலை எங்களைக் கவலையடையச் செய்துள்ளது. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளின் சேர்க்கையில் மாணவர்களுக்குப் பல்வேறு நிச்சயமற்ற தன்மைகள் நிலவுகின்றன. இது ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ந்து வருகிறது. மாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், கல்வித் துறையை ஏன் சீர்படுத்தக் கூடாது? மாணவர்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசும், மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.மாணவர் சேர்க்கையிலேயே குழப்பங்கள் இருந்தால், அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். மகாராஷ்டிர மாணவர்களின் இந்த நிலைக்கு அந்த மாநில அரசே முழுப் பொறுப்பாகும். எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பு கிடைக்கும் என்றே மாணவர்களுக்குத் தெரியவில்லை.
இந்த
விவகாரத்தில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. இதில்மேலும் குழப்பங்களை விளைவிக்க நாங்கள் விரும்பவில்லை. மருத்துவ மற்றும் பல் மருத்துவ முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வை வரும் 14-ஆம் தேதிக்குள் மாநில அரசு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments
Post a Comment