தமிழகத்தில் இனி 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி - தமிழக அரசு அரசாணை வெளியிட்டது!
சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு இதுவரை அனுமதி இல்லை. சில வகையான நிறுவனங்கள், மருந்தகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட அரசு அனுமதி அளித்து வந்தது. ஓட்டல் உள்பட வணிக நோக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளுக்குமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி இல்லை. இதனால் இரவு 10 மணி அல்லது 11 மணிக்கு மேல் உணவுகள் கிடைக்காமல் சென்னை உள்பட பல நகரங்களில் மக்கள் தவித்து வருகிறார்கள். இதேபோல் இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகள் எதற்கும் மக்கள் வெளியில் சென்று வாங்க முடியாத நிலையில் இருந்தனர். இது தொடர்பாக வணிகர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே இனிமேல் 10 மணிஆச்சு கடையை பூட்டு என்று எந்த கடையிலும் வந்து போலீசார் தொந்தரவு செய்ய வாய்ப்பு இல்லை. இதேபோல் மக்களும் 10 மணி அல்ல 11 மணி, 12 மணி என்றாலும் வேண்டிய பொருட்களை ஷாப்பிங் செய்யலாம். இதேபோல் எந்த நேரமாக இருந்தாலும் விரும்பிய வகையில் , உணவுகளை வாங்கி சாப்பிடலாம். இதற்கான தடைகள் விலக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதுகாப்பு காரணங்களுக்காகவே இரவு நேரங்களில் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. இனி யார் வேண்டுமானாலும் இரவு நேரங்களில் சர்வ சாதாரணமாக வந்து செல்ல வாய்ப்பும் உள்ளது.
No comments
Post a Comment