தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் 19,426 பேர் கட்டாய டிரான்ஸ்பர்
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள 19,426 ஆசிரியர்களுக்கு கட்டாய பணியிடமாறுதல்வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு, பணி நிரவல் செய்யும் பணி நடைபெறும்.3 வருடங்களுக்கு மேல் ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரை விருப்பத்தின்பேரில் ஒருமாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கும், ஒரு ஒன்றியத்தில் இருந்து மற்றொரு ஒன்றியத்துக்கும், அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே என 3 பிரிவுகளாக மாவட்டவாரியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு ஒன்றில் பணியிட மாறுதல் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.
இதற்கான நெறிமுறைகள் அடங்கிய அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் ஆசிரியர், மாணவர் இடையேயான விகிதாச்சாரம் தமிழ்வழிக் கல்வியைப் பொறுத்தவரையில், 1 முதல் 5ம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ்2
வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும் ஆசிரியர் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. ஆங்கில வழிக்கல்வியைப் பொறுத்தவரையில், 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணி நிரவல் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விகிதாச்சாரம் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப்
பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப்பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை
தயாரித்துள்ளது.
இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2,279 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 17,147 பட்டதாரி, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஜூலை 9ம் தேதி தொடங்க உள்ள பதவி உயர்வு, விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் இடம் தேர்வு செய்ய உள்ளனர்.அந்த கலந்தாய்வில் 3 ஆண்டுகள் பணி செய்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறலாம். அதில் சீனியாரிட்டி முறை பின்பற்றப்படும். இதுதவிர இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறையில் குறிப்பிட்டுள்ள காரணங்களின் அடிப்படையிலும் பணியிட மாறுதல் வழங்கப்பட உள்ளது.அதைத்தொடர்ந்து காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்கள் கட்டாய பணியிடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
5,400 பேர் நிலை என்ன?
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: அங்கன்வாடி மையங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி உண்டா இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. அதே போல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், உபரி ஆசிரியர்கள் உள்பட ஆசிரியர்கள் என 5,400 பேர் மீது 17பி மெமோ வழங்கப்பட்டுள்ளது. 17பி மெமோ திரும்ப பெற்றால் மட்டுமே விரும்பியஊர்களுக்கு பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்க முடியும். அவ்வாறு திரும்பப்பெறாத பட்சத்தில் 2 ஆண்டுகளுக்கு சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்படும். அதே போல், 3 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. ஒரு பள்ளியில் குறைவான ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக கருதப்படுகின்றனர்.
19,426 பேர் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் பதவி உயர்வு, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் தான், காலியிடங்களுக்கு ஏற்ப எவ்வளவு உபரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படுவார்கள்என்பது தெரியவரும். இதனால் 17பி மெமோ பெற்ற ஆசிரியர்களுக்கு பாதிப்பு இருக்கவே செய்யும். இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் கூறினார்.
No comments
Post a Comment