12 ஆசிரியர்களிடம் ரூ.1.25 கோடி வசூலிக்க இயக்குனர் உத்தரவு
போலி
ஆணை மூலம், ஊதியம் பெற்ற, பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து, 1.25 கோடி ரூபாயை வசூலிக்க, உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1995 - 98ம் ஆண்டுகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக இருந்த, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், 42 பட்டதாரி ஆசிரியர்களை, அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் நியமித்தன.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது எனத் தெரிவித்த, பள்ளி கல்வித் துறை இயக்குனர் அலுவலகம், அவர்களுக்கு, ஊதியம் தரக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
இது
தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின், மதுரை கிளை உத்தரவுப்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, குழந்தைகள் மன இயல் பயிற்சி அளித்து, 2003 ஜூன், 2ம் தேதி முதல், ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே, 2017ம் ஆண்டு, தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக இருந்த, ரெங்கநாதன் உத்தரவுப்படி, 12 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 1995ம் ஆண்டு முதல், பணிபுரிந்த நிலுவை தொகை வழங்கப்பட்டது.இது தொடர்பாக, ராமநாதன் என்ற ஆசிரியர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில், தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றிய, ரெங்கநாதன், தொடக்க கல்வி இயக்குனரின் கையெழுத்தை, போலியாக பயன்படுத்தி, உத்தரவு தயாரித்து, அரசு கருவூலத்துக்கு அனுப்பியது, தெரிய வந்தது.மேலும், 1995ம் முதல் ஊதியம் கேட்டு, பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை, 2018 நவம்பரில், நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும், தெரிய வந்தது.இந்நிலையில், 12 ஆசிரியர்கள் பெற்ற சம்பளம், 1.25 கோடி ரூபாயை, வசூல் செய்யுமாறு, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர், கருப்பசாமி உத்தரவிட்டு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.போலீசில் புகார் அளித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment