Header Ads

Header ADS

TET 2019 தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!



ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளுக்கு விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதிச் சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது. 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், பிரதான பாடத்தில் இருந்து 30 சதவீத மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் விலக்கு வழங்கப்படும் எனவும் அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டு, ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

 இந்த தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கும் நிலையில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, பிரதான பாடத்திற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்காவிட்டால், பிரதான பாடத்தில் ஒரு மதிப்பெண் கூட எடுக்காதவர்கள் அந்த பாடங்களுக்கு ஆசிரியர்களாகி விடுவர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், 1,500 ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதாமல் உள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுத காத்திருப்பதால், இந்த தேர்வுக்கு தடை விதிக்க கூடாது.  கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.