பர்சனல் லோன்... வங்கிகள் நிராகரிக்காமல் இருக்க 7 வழிமுறைகள்
திடீர் தேவைகள் மற்றும் குடும்பத்தில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள், பிள்ளைகளின் கல்விக் கட்டணம் போன்றவற்றுக்காக மக்கள் பெரும்பாலும் நாடுவது பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடனைத்தான். அதே சமயம் வங்கிகள் அந்தக் கடனை அவ்வளவு சுலபத்தில் தூக்கிக் கொடுத்து விடுவதில்லை. விண்ணப்பதாரரின் கடன் பெறும் தகுதி குறித்து பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பின்னர்தான் கடனுக்கு ஒப்புதல் வழங்குகின்றன. இப்படியான சமயங்களில் சிலரது கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அவ்வாறு கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்போது, அதற்கான காரணமாக வங்கிகள் பெரும்பாலும் சொல்வது 'உங்களுக்குப் போதுமான கிரெடிட் ஸ்கோர் (credit score) இல்லை என்பதுதான்.
பொதுவாக கிரெடிட் ஸ்கோர் 750 மற்றும் அதற்கு மேல் இருக்கும்போது அது நல்ல அளவீடாகக் கருதப்பட்டு, கடன்
வழங்கப்பட்டு விடுகிறது. கடந்த கால கடன் வரலாறு (loan history), கடன் பயன்பாட்டு விகிதம், கடன்/கிரெடிட் கார்டுகள் தொடர்பான விசாரிப்புகள், மாத வருமானம், வருவாய் விகிதத்துக்கு உரிய நிரந்தர செலவுகள், ஊழியரின் சுய விவரம், பணி நிரந்தரம் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டே, ஒருவரது கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது.
இந்த
நிலையில், உங்கள் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால்
செய்யக் கூடாத மற்றும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே.
செய்யக்கூடாதவை
1. கடன் விண்ணப்பத்தில் தவறு
கடன்
விண்ணப்பத்தில் தவறுகளோ, தெளிவின்மையோ இருந்தால் வங்கிகள், கடன் விண்ணப்பங்களை முதல்கட்டத்திலேயே நிராகரித்துவிடும். விண்ணப்பதாரரின் இருப்பிடம், வேலை செய்யும் நிறுவனம் உள்ளிட்ட விவரங்களை ஏஜென்சி மூலமாகத்தான் வங்கிகள் சரிபார்க்கும் என்றாலும், சரியான விவரங்கள் தெரிவிக்கப்படுவதோடு, தேவைப்படும் ஆவணங்களையும் அளிக்க வேண்டும். சிபில் ஸ்கோர் அடிப்படையில் உங்களுக்குக் கடன் வழங்க வங்கிகள் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருந்தாலும், சரியான ஆவணங்கள் அளிக்கப்படவில்லை என்றால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடும்.
2. ஒரே நேரத்தில் பல வங்கிகளிடம் கடன் கோரக்கூடாது
கடன்
தேவைப்படும் நேரத்தில் நீங்களே ஆன்லைன் மூலமாக வெவ்வேறு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன் வகைகளைத் தெரிந்துகொண்டு, பின்னர் உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். அதேபோன்று உங்களுக்கான கிரெடிட் ஸ்கோரையும் அதற்கென்றே இருக்கும் ஏஜென்சிகளின் தளம் மூலம் கேட்டுப் பெறலாம். அப்படிச் செய்யும்போது அது உங்களது கிரெடிட் ஸ்கோரில் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக, எந்த வங்கி அதிக தொகை கடன் தருகிறார்களோ அல்லது யார் வட்டி விகிதத்தைக் குறைத்து தருகிறார்களோ அல்லது முதலில் தருகிறார்களோ அவர்களிடம் வாங்கலாம் என்ற எண்ணத்தில் ஒரே நேரத்தில் பல வங்கிகளுக்குக் கடன் விண்ணப்பங்களை அளிக்கக்கூடாது. அப்படிச் செய்தால், அது சம்பந்தப்பட்டவரின் கிரெடிட் ஸ்கோரை வங்கிகள் பார்ப்பதன் மூலம், அது பதிவாகி விடும். இதனால், 'இந்த விண்ணப்பதாரர் அதிக கடன் தாகம் கொண்டவராக உள்ளார்' எனக் கருதி வங்கிகள் கடன் விண்ணப்பத்தை நிராகரித்து விடும்.
3. அடிக்கடி வேலை மாறக்கூடாது
நிலையான வேலையில், ஒரே நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றும் விண்ணப்பதாரர்களுக்கே கடன் வழங்க வங்கிகள் முன்னுரிமை அளிக்கும். குறிப்பாக, கடன் தொகை பெரிதாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றுகிறீர்கள் என்பதை வங்கிகள் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளும். எனவே, அடிக்கடி வேலை மாறுபவர்களின் விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.
4. பல லோன்கள் எடுப்பது கூடாது
சிலருக்கு வங்கிக் கடன், அவர்கள் விரும்பிய தொகைக்கு கிடைத்திருக்காது அல்லது ஏற்கெனவே லோன் எடுத்திருந்தும், சில தேவைகளுக்காக அவர்கள் மீண்டும் கடன் பெற விரும்புவார்கள். ஆனால், ஒருவர் பல லோன்களை எடுக்கும்பட்சத்தில் அவர் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதனால் மன உளைச்சல் ஏற்படுவதோடு, சம்பந்தப்பட்டவரின் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்பட்டு விடும்.
செய்ய வேண்டியவை
1. வருவாயில் 40% க்குள் கடன் தவணை
உங்களுடைய குறைந்தபட்ச மாதாந்திர வருமானம் மற்றும் உங்களுடைய சராசரி வங்கி இருப்பு ( average balance) போன்றவற்றின் அடிப்படையிலேயே உங்களது கடன் விண்ணப்பத்தை வங்கிகள் பரிசீலிக்கும். எனவே, ஏற்கெனவே கடன் வாங்கி இருந்தாலும் சரி, அல்லது வாங்கப்போகிற கடனும் சரி, எதுவானாலும் மாதாந்திர கடன் தவணை, உங்கள் வருவாயில் 40 சதவிகிதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை அதற்கு மேல் சென்றால், கடன் தவணை மாதங்களை அதிகரித்து, இஎம்ஐ தொகையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
2. கடன் பயன்பாட்டு விகிதம்
உங்களது கடன் பயன்பாட்டு விகிதம் 30 சதவிகிதத்துக்குக் கீழ் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது உங்களது கிரெடிட் கார்டுக்கான செலவழிக்கும் வரம்பு ஒரு லட்சம் ரூபாய் என்றால், அதில் 30 சதவிகிதம் அளவுக்குள்ளேயே, உங்கள் கடன் பயன்பாட்டு வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, உங்களது கிரெடிட் கார்டைக் கொண்டு 30,000 ரூபாய்க்கு மேல் செலவழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த விகிதத்தைத் தாண்டினால், அது உங்களது கிரெடிட் ஸ்கோரைப் பாதித்து விடும்.
3. கடன் தவணை மற்றும் கிரெடிட் கார்டு கடன்
கடன்
விண்ணப்பத்தை அளிக்கும் முன்னர், ஏற்கெனவே வங்கிக் கடன் வாங்கி இருந்தால், அந்தக் கடனுக்கான இஎம்ஐ மற்றும் தற்போது பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்டு கடன் தவறாமல் அந்தந்த மாதத் தவணைத் தேதியில் கட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு அளியுங்கள் . அப்படி இருந்தால்தான் அது உங்களை, ' கடனைச் சரியான தேதியில் கட்டுபவர்' என்பதை உங்களது கடன் 'கண்காணிப்பு பதிவு' (track record) மூலம் வங்கிக்குத் தெரியப்படுத்துவதோடு, கிரெடிட் ஸ்கோரையும் உயர்த்தும்.
இங்கே குறிப்பிட்டுள்ள விஷயங்களைச் சரியாக பின்பற்றினால், பர்சனல் லோன் கிடைக்கும் என்றாலும், இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது, முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது!
No comments
Post a Comment