12,915 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்குகள் நிராகரிப்பு!
மக்களைவை தேர்தலில் 12,915 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் முறையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் செலுத்த முடியவில்லை என அரசு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியிருந்தன. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முறையாக தபால் ஓட்டுகள், குறிப்பாக படிவம் 12 முறையாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக சாந்தகுமார் என்ற அரசு ஊழியர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு முறையான ஒட்டு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தபால் ஓட்டுகள் தொடர்பான ஒரு முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாணைக்கு வந்த நிலையில், தேர்தலில் 12,915 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கையில் தகவல் அளித்துள்ளது. 4,30,000 பேர் தபால் ஓட்டுகள் பெறுவதற்கு தகுதி பெற்றவர்களாக இருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் படிவம் 12 மற்றும் 12ஏ கொடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பூர்த்தி செய்து அனுப்பப்பட்ட 4,10,000 பேரில் அந்த படிவங்களை முறையாக பரிசீலித்து 3,97,000 பேருக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் பூர்த்தி செய்து அனுப்பியபோது 12,915 பேரின் தகவல்கள் சரியாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் செலுத்த முடியவில்லை என்ற மனுதாரர் குற்றச்சாட்டு பொய் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தபால் வாக்குகள் தொடர்பாக குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோரின் வாக்குகள் முழுமையாக பதியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
No comments
Post a Comment