வட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
அஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர், 43. இவர், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில், வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அஞ்செட்டி ராமர் கோவில் பகுதியில், குறிஞ்சி மலர் என்ற ஆங்கில துவக்கப்பள்ளி, குறிஞ்சி டவர் என்ற பெயரில், வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.
இவர்,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, ஓசூர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன. கோடிக்கணக்கில் வட்டிக்கு விட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, ஓசூர், வருமான வரித்துறை உதவி ஆணையர், சாய்ராஜ் தலைமையில், ஆறு பேர் குழுவினர், நேற்று மதியம் முதல் இரவு வரை, வண்ணாத்திப் பட்டியில் உள்ள சுதாகர் வீடு, வணிக வளாகம், தங்கும் விடுதி, துவக்கப்பள்ளி ஆகியவற்றில் சோதனை செய்தனர்.அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. வட்டார கல்வி அலுவலர் சுதாகரை, இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டு சென்றனர்.
No comments
Post a Comment