மின்சாரமே பார்த்ததில்லை, பத்தாவதில் பள்ளியில் முதலிடம், ப்ளஸ் டூவில் 524 - சஹானா
நிமிர்ந்து நிற்கக்கூட முடியாத சிறிய அளவிலான குடிசை வீடு, மின்சாரம் இல்லாததால் எப்போதும் வெளிச்சத்தைப் பார்த்ததில்லை என அந்த வீட்டினுள் படர்ந்துள்ள இருள் சொல்லாமல் சொல்கிறது கஜா புயலுக்கு தான் இரையானதை.
குருவிக் கூட்டைவிட சற்றுப் பெரியதாக இருக்கிறது அவ்வளவே. ஆனால் அதன் உள்ளேயிருந்து வீசிய வெளிச்சம் அளவில்லாதது. ஆம், நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்று நம்மை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகிறார் தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.இவர் அப்பா கணேசன் கூலித் தொழிலாளி. பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயிரி கணிதவியல் பாடப்பிரிவில் படித்து 600 க்கு 524 மதிப்பெண் எடுத்து அசத்தியிருக்கிறார்.வறுமையின் கோரப் பிடியில் அவருடைய குடும்பம் சிக்கித் தவிக்கிறது. நல்ல கல்வி, குடும்ப கஷ்டத்தைப் போக்கும் என நினைத்து நன்றாகப் படித்து தன்னுடைய குடும்ப வறுமையை விரட்டப் போராடிக்கொண்டிருக்கிறார்.
சஹானாவிடம் பேசினோம். ``எங்க அப்பா கணேசன் டெய்லர் கடையில் கூலி வேலை பார்க்கிறார். ஒரு அக்கா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். நாங்க தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடிசை வீட்டில்வாடகைக்குக் குடியிருக்கோம். தோப்பையும் சேர்த்து கவனிச்சுகிடுறது எங்க வேலை. அப்பாவுக்கு போதுமான வருமானம் இல்லாததால் எங்களையும் எங்க வீட்டையும் வறுமை எப்பவும் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். நானும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டேன். இன்னும் எங்க வீடு மின்சாரத்தைப் பார்த்ததேயில்லை. இதுவே எங்க வறுமைக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது. வெளிச்சம் இல்லாமல் இருள்படர்ந்த எங்க வீடு மாதிரிதான் வாழ்க்கையும். அப்பாவுக்கு, தான் கால் வயிற்று கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லை, பிள்ளைகளை நல்லா படிக்க வேண்டும் என நினைத்து எங்களைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். பல சமயம் எங்க வீட்டில் அடுப்பு எரியாது. ஆனாலும், எங்க அம்மா சித்ரா தன்னுடைய புன்னகையால் எங்கள் வயிற்றை நிரப்புவாங்க. மனசுக்குள்ள பெற்ற பிள்ளைகளுக்கு முழுசா சோறு போட முடியவில்லையே தோணுறப்ப எல்லாம்அவங்க அழுததை நான் பார்த்திருக்கேன்.நான் படிக்கிற படிப்புதான் எங்க வீட்டில் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன். அதனால் தீவிரமாகப் படித்தேன். காலைச் சூரிய வெயில்தான் எனக்கு வரம். பள்ளியில் படிப்பை முடித்ததும் இரவு தெருவிளக்கில் உட்கார்ந்து படிப்பேன். வீட்டுக்கு வந்துவிட்டால் மின்சாரம் இல்லாமல் படிக்க முடியாது. அப்படியிருந்தும் பத்தாம் வகுப்பில் பள்ளியளவில் முதலிடம் பெற்றேன். பன்னிரண்டாம் வகுப்பில் நன்றாகப் படித்தால்தான் வெளிச்சம் கிடைக்கும் என நினைத்து நான் படித்துக்கொண்டிருக்க, அதில் இடி விழுந்தது போல் கஜா புயலால் எங்கள் வீடு காணாமல் போனது. ஒதுங்க இடம் இல்லாமல் பல நாள்கள் வெட்ட வெளியில் நாள்களைக் கடத்தினோம். ஈர மனம் படைத்தவர்களின் உதவியுடன் வீட்டைச் சீரமைத்தோம். எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் நிவாரணத்துக்கு வந்த பொருள்களை எனக்குக் கொடுத்தார் அதில் சோலார் விளக்கு இருப்பதை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்போதுதான் என் ஆசிரியருக்கு எங்கள் வீட்டில் மின்சாரமே கிடையாது என்பதை தெரிந்துகொண்டார். `இதுவரைக்கும் நீ கரன்ட்டே இல்லாமதான் படிச்சு மார்க் வாங்கியிருக்கியானு அசந்து போய் கேட்டார்.பிறகு எதைப் பற்றியும் நினைக்காமல் படி' என ஆசிரியர்களும், அருகில் இருந்தவர்களும் உற்சாகப்படுத்தினார்கள். நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பல கஷ்டத்திற்கு இடையிலும் என்னை விடாமல் படிக்க வைத்தார் என் அப்பா. இப்போது, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலை என்னை ஆட்கொள்கிறது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசையால் வீட்டிலிருந்தே நீட்டுக்கான பயிற்சியை எடுத்து வருகிறேன். ஆனால்போதுமான வசதி இல்லையே. எப்படியாவது யாராவது என் மேற்படிப்புக்கு உதவுவார்கள் என்கிற ஒற்றை நம்பிக்கையைக் கொண்டே என் நாள்களைக் கடத்தி வருகிறேன்'' என்ற ஏக்கத்தோடு முடித்தார் சஹானா.
உதவ
முடிந்தவர்கள் உதவலாமே...
No comments
Post a Comment