சபாஷ்💐 தூரோடு பெயர்க்கப்பட்ட ஆலமரத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
*திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் கல்வெட்டுமேடு பகுதியில் ஆலமரம் பேருந்து நிறுத்தம் என்று ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தில் நூறாண்டுக்கு மேற்பட்ட பழமை மிக்க மூன்று ஆலமரங்கள் இருந்தன.*
*சாலை விரிவாக்கத்தின் போது அந்த மூன்று மரங்களும் வேறு வழியின்றி வெட்டப்பட்டன. மூன்று மரங்களின் கிளைகளும் அகற்றப்பட்டு அடிமரம் தூரோடு பெயர்க்கப்பட்டு கிடந்த காட்சி காண்பவர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.*
*அப்பகுதி மக்கள் இந்த இடத்தின் மிக முக்கிய "லேண்ட் மார்க்" போய்விட்டதே என்று வருந்தினர். ஒரு சிலர் சமூக வலைத் தளங்களிலும் தங்களது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டனர்.*
*இவ்வாறு இதைக் கண்டு வருந்திய திருப்பத்தூர் ஒன்றியம், கருப்பூர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.பூ.இராதா கிருஷ்ணன் அவர்கள், என்னைத் (தைசா.ஜேசுராஜ்) தொடர்பு கொண்டு, "தம்பி, இந்த மூன்று ஆலமரங்களையும் சாலைக்கு மறுபுறம் நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.*
*நானோ, "அண்ணே, இது மிகவும் பொருட்செலவு கொண்ட வேலை, இது நம்மால் முடியாது" என்றேன்.*
*ஆனால் அண்ணன் அவரகளோ, "இல்லை தம்பி, இதைக் கட்டாயம் செய்ய வேண்டும், பிறரின் உதவியையும் நாடுவோம்" என்று பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு.ரங்கராஜன் அவர்களையும், ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.ஸ்ரீதர் ராவ் அவர்களையும், கீழநிலை தலைமையாசிரியர் திரு சகாயராஜ் அவர்களையும், தேவரம்பூர் பட்டதாரி ஆசிரியர் திரு.சாலின் ஜோஸ் அவர்களையும்எங்கள் முன்னாள் ஆசிரியரும், ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலருமான திரு.ரெங்கசாமி அவர்களையும், பிராமணம்பட்டி ஆசிரியர் திரு.சிங்கராயர் அவர்களையும் இணைத்துக் கொண்டு, ஆ.பி.சீ.அ கல்லூரி துணை முதல்வரை நாடினோம்.*
*அவரும் தனது கல்லூரிச் செயலாளரின் இசைவுடன் இந்த நல் முயற்சியில் கரம் கோர்த்தார். அது மட்டுமல்ல, துணை முதல்வர் திரு.கோபிநாத் அவர்களுக்கு இந்த மரக்கன்றுகள் நடுதல், மரத்தையே பிடுங்கி நடுதல் போன்றவற்றில் நல்ல அனுபவ அறிவு இருந்தது இச்செயலுக்கு பெரிய உறுதுணையாய் இருந்தது.*
*நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்த சனிக்கிழமை நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளரைச் சந்தித்து, இம் முயற்சிக்கு அவரின் உதவியைக் கோரினோம். மேலும், வனத்துறை ஒப்பந்ததாரர் திரு.தியாகு அவர்களும் எங்களுடன் இணைந்தார். அவரின் JCB, மற்றும் டிப்பர் லாரிகளை இலவசமாகத் தந்தார்.*
*சனிக்கிழமை மாலை இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி சனிக்கிழமை மாலையே மூன்று குழிகள் தோண்டப்பட்டன. தோட்டக்கலைத் துறையின் ஆலோசனையின் படி அவற்றில் தண்ணீர் நிரப்பி ஒன்றரை நாள் ஆறவைக்கப்பட்டது.*
*திங்கட்கிழமை (25-03) காலை மரங்கள் மூன்றையும் தூக்கி நடும் வேலை தொடங்கியது. ஆ.பி.சி.அ கல்லூரி துணை முதல்வர் மற்றும் இரண்டு பேராசிரியர்களுடன் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 30 பேர் எங்களுடன் இணைந்தனர்.*
*இரண்டு கிரேன், இரண்டு பேக் கோ லோடர் (ஜேசிபி), இரண்டு டிப்பர் லாரி இவைகளக் கொண்டு, மரங்கள் மூன்றையும் நடும் வேலை தொடங்கியது. மின் வாரியம் மின் இணைப்பைத் துண்டித்து எங்கள் வேலைக்கு உதவியது.*
*மூன்றில் பெரிய மரத்தை நட்டு முடிக்க மதியம் 2.30 மணியாகிவிட்டது. நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் எங்களுக்கு மதிய உணவு அவரின் செலவில் அளித்தார்.*
*பின்பு வேலை தொடங்கப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மூன்று மரங்களும் வெற்றிகரமாக புதிய இடத்தில் நட்டு முடிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த மூன்று மரங்களையும் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.*
*இந்த வேலையில் காலையிலிருந்து இரவு வேலை முடியும் வரை துணை முதல்வர், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், வட்டாரக் கல்வி அலுவலர் (ஓய்வு) திரு.ரெங்கசாமி மற்றும் ஆசிரியர்கள் நான் (தைசா.ஜேசுராஜ்), திரு.இராதா கிருஷ்ணன், திரு.ரெங்கராஜன், திரு.ஸ்ரீதர் ராவ், திரு.கணேசன் ஆகியோர் இருந்து களப்பணியாற்றி மன நிறைவுடன் திரும்பினோம்.*
No comments
Post a Comment