கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சலுகை
பொதுத் தேர்வில், 'டிஸ்லெக்சியா' என்ற, கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் விடைத்தாளில், சிறப்பு குறிப்பு எழுத, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில், இன்று ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. பிளஸ் 1க்கு, நாளை தேர்வு துவங்க உள்ளது. தேர்வில், மாற்றுத் திறனாளி மற்றும் சிறப்பு குணங்கள் உள்ள மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மன நலம் பாதிக்கப்பட்டோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் நரம்பியல் பிரச்னை உள்ளோருக்கு, தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அவர்களுக்கு, மாடிகளில் தேர்வறை ஒதுக்கக் கூடாது; தரை தளங்களில், தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில் மட்டுமே, இருக்கை ஒதுக்க வேண்டும்.
மேலும், 50 முதல், 60 நிமிடங்கள் வரை, கூடுதல் நேரம் வழங்க வேண்டும். டிஸ்லெக்சியா பாதிப்புள்ள தேர்வர்களின் விடைத்தாளின் முதல் பக்கத்தில், சிவப்பு மையால், 'டிஸ்லெக்சியா தேர்வர்' என, எழுத வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment