தேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா? மனஉளைச்சலில் ஆசிரியர்கள்
தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்காக 60 கி.மீ தூரம்பயணம் செய்யவேண்டி உள்ளதால், ஆசிரியர்கள் துயரம்அடைந்துள்ளனர்.
எனவே
உள்ளூர் தொகுதிகளிலேயே பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவில் மட்டும் 3 தொகுதிகள் அடங்குகின்றன.
குறிப்பாக கம்பம், ஆண்டிபட்டி(பகுதி), போடி(பகுதி) அடங்குகின்றன. இதில் ஆண்டிபட்டி தொகுதியில் 313 வாக்குச்சாவடிகளில் 85 வாக்குச்சாவடிகள், காமயகவுண்டன்பட்டி, நாராயணதேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, கூடலூர், லோயர்கேம்ப் உள்ளிட்ட ஊர்கள் வருகின்றன. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்பு உத்தமபாளையம் தாலுகாவிற்குள் உள்ள ஆண்டிபட்டி தொகுதியின் அனைத்து தேர்தல்வேலைகளும் ஆண்டிபட்டியில்தான் நடக்கின்றன.இதனால் சட்டசபை, மக்களவை தொகுதிகளின் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் காமயகவுண்டன்பட்டி, கூடலூர் உள்ளிட்ட ஊர்களில் வேலை செய்யக்கூடிய தேர்தல் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் 60 கி.மீ மேல் பயணம் செய்து ஆண்டிபட்டிக்குதான் செல்லவேண்டும். இதனால் மன உளைச்சல் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மாற்றுதிறனாளிகள், பெண்கள், வயதான அரசுஊழியர்கள் பெரும் மனஉளைச்சலை சந்தித்து ஆண்டிபட்டிக்கு செல்லவேண்டும். மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 31 மற்றும் ஏப். 7, 13ம் தேதிகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.பல கிலோ மீட்டர் பயணம் என்பதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவதி அடைந்துள்ளனர். எனவே, பயிற்சி வகுப்புகளை கம்பம் தொகுதிக்குள் நடத்திட தேனி கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.ஒரே தாலுகாவில் விநோத பயணம்உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் தொகுதியில் கம்பத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை 5 கிலோ மீட்டருக்குள் பெற்றுக்கொள்கின்றனர். அதேநேரத்தில் கம்பத்தில் இருந்து 3 கிலோ மீட்டருக்குள் காமயகவுண்டன்பட்டி வருகிறது.
இது
ஆண்டிபட்டி தொகுதிக்குள் செல்கிறது. இங்கு பணியாற்றக்கூடியவர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்காக சுமார் 60 கி.மீ வரை பயணம் செய்யவேண்டி உள்ளது. மாற்றுதிறனாளிகள், நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள், பெண்கள் பயிற்சி வகுப்புகளுக்குள் செல்வதற்கு சிரமம் அடையவேண்டிஉள்ளது. சுமார் 150 பேர் வரை சிக்கலை சந்திக்கின்றனர். எனவே, தேனி கலெக்டர் பயிற்சி வகுப்புகளை மட்டும் உத்தமபாளையம் தாலுகாவிற்குள் அளித்துவிட்டு தேர்தல் பணிகளை வழக்கம்போல் தொகுதி மாற்றி அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments
Post a Comment