போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதளம் - முதல்வர் தொடங்கிவைத்தார் - தமிழக அரசு தகவல் ( www.tamilnaducareerservices.gov.in )
போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட தகவல்: மாணவர்கள், வேலைதேடுவோருக்கு உயர்கல்வி-வேலைவாய்ப்பு குறித்த தொழில் நெறி வழிகாட்டுதல், உளவியல் ஆய்வின் அடிப்படையில் திறன் அறிதல், தனியார் துறை பணி நியமனத்துக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் போன்ற பல்வேறு வழிமுறைகளின் அடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன அலுவலக வளாகத்தில் மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த
மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் www.tamilnaducareerservices.gov.in என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளமானது, காணொலி வழி கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின்னணு புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வுகள் ஆகியவற்றை எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், ஈரோடு, விருதுநகர், கரூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் அலுவலர் அலுவலகக் கட்டடங்களையும், அரசு தொழில் பயிற்சி நிலைய கூடுதல் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் நிலோஃபர் கபில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழிலாளர் நலத் துறை முதன்மைச் செயலாளர் சுனீல் பாலிவால், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஆணையாளர் ஜோதி நிர்மலாசாமி உள்ளிட்டோர் பங்கேற்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment