School Morning Prayer Activities - 12.02.2019 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, February 11, 2019

School Morning Prayer Activities - 12.02.2019

Image result for morning prayer

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

உரை:

தீயசொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
 
பழமொழி:

Honesty is the best policy

நேர்மையே சிறந்த கொள்கை

பொன்மொழி:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

- சார்லஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
 ஈசல்

2) நின்றபடியே தூங்கும் பிராணி எது ? குதிரை

நீதிக்கதை :

பொறுமையின் சிறப்பு .
        11111111111111111111111111111111111111111111111111111111111    
        கந்தசாமி ஒரு கடையில் கணக்கெழுதும் ஒரு கணக்கராகப் பணிபுரிபவர்.அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூவரில்
காந்தாமணி என்ற சிறுமி தன பெற்றோருக்கு மூன்றாவதாகப் பிறந்த பெண்.அவளுக்கு முன்னால்  ஒரு அண்ணனும் அக்காவும் இருந்தனர்.அக்காவின் பெயர்  ரமாமணி அண்ணனின் பெயர் சுப்பிரமணி.ராமாவும் சுப்பிரமணியும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டும் பெற்றோர் சொல்லக் கேளாமலும் இருப்பார்கள் அத்துடன் எல்லாவற்றுக்கும் அவசரப்படுவதும் போட்டி போடுவதுமாகஇருப்பார்கள்.ஆனால் காந்தாமணியோ இவர்களிடமிருந்து சற்று  ஒதுங்கியே நிற்பாள்.எப்போதும் அம்மாவுக்கு உதவியாக அவளுடனேயே இருப்பாள்.அப்பாவும் எந்த  வேலையாக இருந்தாலும் காந்தாமணியைத்தான் உதவிக்கு அழைப்பார். மற்ற இருவரையும் எந்த வேலைக்கும் கூப்பிட மாட்டார். ஒரே பையனாயிற்றே என்று எந்த சலுகையும் சுப்பிரமணிக்குக்  காட்டவும் மாட்டார்.இதனால் மூத்தவர்கள் இருவருக்கும் ரமாமணியின் மீது அளவற்ற பொறாமை உண்டாயிற்று.

        இவர்கள் மூவரும் ஒரே மாதிரிதான் பள்ளிக்குப் புறப்படுவார்கள்.  வழியிலேயே ரமாவும் சுப்பிரமணியும் சண்டையிட்டுக் கொள்வார்கள். அதனால் காந்தாமணி இவர்களை விட்டு விலகிப் போய்விடுவாள்.அவளுக்கு சண்டையென்றாலே பிடிக்காது. அதனால் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் தன அண்ணனையும் அக்காவையும் பார்த்துப் பயந்து எப்போதும் விலகியே இருப்பாள்.அவள் அவ்வாறு இருப்பதைப்  பொறுக்காத ரமாமணி அவளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்து அழவைப்பாள்.

         அவள் அழும்போதெல்லாம் அவள் அப்பா அவளுக்குத் துணையாக வந்து சமாதானப் படுத்துவதுடன் தின்பதற்கு ஏதேனும் வாங்கிக் கொடுப்பார்.ஆனால் அதைப்  பத்திரமாக வைத்திருந்து தன அக்காவுடனும் அண்ணனுடனும் பங்கு போட்டுத் தான் தின்பாள்  காந்தாமணி. இந்த இவளது  நல்ல உள்ளத்தைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை அவ்விருவரும்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட  மாட்டாள் காந்தாமணி.

          மூவரும் அடுத்தடுத்த வகுப்பில் படித்து வந்தனர்.காந்தாமணி ஆறாம் வகுப்பிலும் ரமாமணி ஏழாம் வகுப்பிலும் சுப்பிரமணி எட்டாம் வகுப்பிலும் படித்து வந்தனர்.அதனால் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்தைப் பத்திரமாகப்  பாது காத்து அடுத்த ஆண்டு அடுத்தவருக்கு அதை உபயோகப் படுத்தச் சொல்வார் அவர்களின் அப்பா.ஆனால் அண்ணனின் புத்தகத்தைக் கிழிக்கவும் கிறுக்கவும் சொல்லி  தனக்கு மட்டும் புதுப் புத்தகம் வாங்கிவிடுவாள் ரமாமணி.

           தந்தையார் திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமலேயே தங்களின் விருப்பத்தை  மட்டும் நிறைவேற்றிக் கொள்வார்கள் இருவரும் ஆனால் காந்தாமணி கேளாமலேயே  தேவையானதை வாங்கித் தருவார் அவர்களின் தந்தையார். இளம் வயதிலேயே பொறுமையும் அன்பும் கொண்ட காந்தாமணியைப பலரும் விரும்பியதில் ஆச்சரியமில்லை. தன சகோதர சகோதரியும் எவ்வளவு தொந்தரவு துன்பம் கொடுத்தாலும் அதைப் பாராட்டாது அவர்களிடம் பிரியமாகவே நடந்து கொண்டாள்  காந்தாமணி.

          ஒருமுறை பள்ளியில் திருக்குறள் விழா நடைபெறுவதாக ஏற்பாடுகள்  நடந்தன. பெரிய அறிஞர் திருக்குறள் மேதை ஒருவர் வருவதாக அறிவித்திருந்தனர்.அங்கு பெற்றோரும் வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர். அந்த விழாவிற்கு காந்தாமணியின் தந்தையாரும் வரவிரும்பினார். அதனால் அவர் தன்  பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு விழாவுக்கு வர முடிவு செய்திருந்தார்.

விழா நாளும் தொடங்கியது. வந்திருந்த பெரியவர்கள் மேடைமீது அமர்ந்திருந்தனர். மாணவ மாணவிகளெல்லாம் வகுப்பு வாரியாக அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் தன பிள்ளைகளைத் தேடினார் கந்தசாமி.அவர் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு காந்தாமணி தன ஆசிரியையிடம் அனுமதி பெற்று அவரிடம் ஓடிவந்தாள்.
"அப்பா, எப்போ வந்தீங்க?" என்று கேட்டு மகிழ்ச்சியுடன் கையைப் பற்றிக் கொண்டாள்.
சற்று நேரம் பேசிவிட்டு போகும்போது காத்திருந்து அழைத்துப் போவதாகச் சொன்ன அப்பாவை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே தன இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தாள் காந்தாமணி.

ஆனால் ராமாவும் சுப்பிரமணியும் அப்பாவைக் கண்டு கொள்ளவே இல்லை.அன்றைய குறளை பொருள் கூறி விளக்கினார் அறிஞர்.
அருமையான அந்தப் பேச்சில் உருகி அமர்ந்திருந்தார் கந்தசாமி.பொறுமையின் சிறப்பைப் பற்றி அவர் பேசப்பேச தன மகள் காந்தாமணியின் பண்புகளே அவரின் நினைவுக்கு வந்தது.
                     "அகழ்வாரைத்  தாங்கும் நிலம்போலத் தன்னை
                       இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
எத்தனை அருமையான குறள்      தன கடைக் குட்டி மகளுக்கேற்ற குறள்.கூட்டம் முடிந்து மகளுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்தார் அவர் மனம் மற்ற இரு பிள்ளைகளை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தது.அவர்களுக்கு காந்தாமணியின்   நல்ல குணத்தை எப்படிப்புரிய  வைப்பது என்ற சிந்தனையில் மூழ்கினார் கந்தசாமி.                   
ஒருவாரம்  சென்றது. அன்று ஒரு விசேஷத்திற்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தனர் அனைவரும்.அவர்களுடன் காந்தாமணியின் பெரியப்பாவும் அத்தையும் வீட்டுக்கு வந்தனர்.அவர்களிடம் தன பிள்ளைகள் ரமாவும் சுப்பிரமணியம்  இருவரும் மிகவும் அடங்காதவர்களாக இருப்பதாகச் சொல்லி இருவரையும் அழைத்துச் செல்லுமாறு கூறிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ரமாமணியும் சுப்பிரமணியம் சற்றே பயந்தனர்.அத்தை கிராமத்தில் இருப்பவர். பெரியப்பா பட்டணத்தில் இருப்பவர்.கிராமத்திற்குச் சென்றால் மாடுகளையும் கோழிகளையும் பார்த்துக் கொள்ளும் வேலை வந்துவிடும்.பட்டணம் என்றால் பெரியப்பாவின் கண்டிப்பின் முன்னால் யாருடைய பிடிவாதமா கோபமோ பலிக்காது.எனவே எங்கு சென்றாலும் கஷ்டம்தான்.நம் வீடுபோல அங்கெல்லாம் இருக்க முடியாது என்பது தெரிந்தே இருவரும் பயந்தார்கள்.ஆனால் அத்தையும் பெரியப்பாவும் காந்தாமணி வந்தால் அழைத்துப் போவதாகச் சொல்லவே இருவரும் மகிழ்ந்தனர்.

            ஆனால் அப்பா காந்தாமணி தனக்கு உதவியாக இருப்பதாகச் சொல்லி மற்ற இருவரையும் அனுப்புவதாகச் சொன்னபோது ரமாவும் சுப்பிரமணியம் சற்றே வருத்தத்தோடு அவமானமும் பட்டனர். அவள் பொறுமையாக எல்லோரையும் பொறுத்துப் போகும் அவளது குணத்தால்தான் எல்லோரும் அவளை விரும்புகிறார்கள் என எண்ணி  சற்றே பொறாமையுடன் அவளை பார்த்தனர்.
மெதுவாக சுப்பிரமணி அப்பாவிடம் வந்தான்."அப்பா, நாங்கள் இனி நீங்கள் சொன்னபடி கேட்டு நடக்கிறோம். எங்களை எங்கும் அனுப்பாதீர்கள் அப்பா."என்றான். அவனுடன் ரமாவும் அருகே வந்து நின்று "ஆமாம்பா.எங்களுக்கு யார்வீட்டுக்கும் போகப் பிடிக்கலைப்பா இங்கேயே இருக்கோம்."என்று கெஞ்சுவதுபோல் சொன்னாள்.

ஆனால் கந்தசாமியோ"அதெல்லாம் முடியாது. அந்தச் சின்னப்பெண்ணை நீங்கள் இருவரும் தினமும் என்ன பாடு படுத்துகிறீர்கள் போய்த் தனியாகவே இருங்கள்."என்றார் கண்டிப்பாக.இருவரும் தங்களின் சுதந்திரம் பறிபோகப் போகிறதே எனக் கண்ணில் நீர் பெருக நின்றிருந்தனர்.

அதைப் பார்த்த பெரியப்பா," சரி உங்களை காந்தமணி அனுப்பவேண்டாம் எனச் சொல்லிவிட்டால் நாங்கள் அழைத்துப்போகாமல் இங்கேயே விட்டு விடுகிறோம்.அவள் அழைத்துப் போகச் சொன்னால் அழைத்துப் போகிறோம்."என்றார் முடிவாக.

அதைக் கேட்டு கந்தசாமியும் சிரித்தபடியே"சரியான யோசனை அண்ணே அப்படியே செய்வோம்"என்றபோது ரமா வுக்கும் சுப்பிரமணிக்கும் அழுகையே வந்து விட்டது. ஏனென்றால் ரமாவை நாம் படுத்திய பாட்டுக்கு அவள் நம்மை விரட்டிவிடத்தான் செய்வாள்.
என்ற எண்ணம்தான் அவர்கள் மனதில் தோன்றியது.சுப்பிரமணி பயத்துடனும் அதேசமயம் மன்னிப்புக் கேட்பது போலவும் பரிதாபமாகப் பார்த்தான் காந்தாமணியை.

காந்தாமணி விக்கி விக்கி அழுது கொண்டே தன சகோதரனின் அருகே சென்று நின்றாள்."அப்பா, அண்ணனையும் அக்காவையும் எங்கேயும் அனுப்பாதீங்கப்பா. அவங்க இல்லேன்னா வீடே நல்லாருக்காதுப்பா."என்றபடியே ரமா சுப்பிரமணி இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டாள் .அந்தக் கரங்களை இருவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அதில் தெரிந்த பாசத்தைக் கண்டு காந்தா சிரித்தாள்.பெரியப்பாவும் புன்னகையுடன் "சரி அப்போ  காந்தாமணி சொல்லிட்டா நாங்க உங்களை விட்டுட்டுப் போறோம். நல்லா படிங்க" என்றபடியே புறப்பட்டனர்.அவர்களை வழியனுப்ப வெளியே சென்றார் கந்தசாமி.
தங்களின் கெட்ட குணங்களையெல்லாம் மறந்து தாங்கள் இழைத்த துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு தங்களிடம் அன்பு காட்டிய அன்புத் தங்கையை எண்ணி மிகவும் ஆச்சரியமும் பெருமிதமும் பட்டார்கள் ரமாவும் சுப்பிரமணியும். இனி இவர்கள் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களைப் பார்த்தவாறு உள்ளே வந்தார் கந்தசாமி.

பொறுத்துக் கொள்வதில் பூமித்தாயைப் போல இருக்கும் காந்தாமணியின் பண்பை நாமெல்லாம் கற்றுக் கொள்வோம்.

 
இன்றைய செய்தி துளிகள் :

1) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித்தொகை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

2) கிருஷ்ணகிரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அணை கட்ட திட்டம்: முதல்வர் பழனிசாமி

3) 2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் : பிரதமர் நம்பிக்கை

4) தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

5) உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரஹானே ஆகிய மூவரும் இடம்பெற வாய்ப்பு - தேர்வுக்குழுத் தலைவர்

No comments: