Header Ads

Header ADS

பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி ஆன்லைனில் பெறும் நடைமுறை விரைவில் அறிமுகம்



தமிழகம் முழுவதும் பிறப்புஇறப்புச் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது.
 
 அதேபோன்று இணையதளம் வாயிலாக பிறப்புச் சான்றிதழில் பெயர்களைச் சேர்க்கும் புதிய முறையும் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.

அரசுத் தரப்பில் வழங்கப்படும் முக்கிய ஆவணங்களையும்,  சான்றிதழ்களையும் பொது மக்கள் எளிதாகப் பெறும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 அதுமட்டுமன்றி நேர விரயமின்றி ஆன்லைன் மூலமாக சான்றிதழ்களைப் பெறுவதற்கும், போலி சான்றிதழ்களைத் தடுப்பதற்கும் இந்த புதிய நடைமுறை உதவும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 வரும் திங்கள்கிழமை (மார்ச் 4) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதையொட்டி, மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களாகப் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு தொடர்பான  தரவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.



தற்போதைய சூழலில்,  சென்னை உள்ளிட்ட ஒரு சில மாநகராட்சிகளில் மட்டுமே கட்டணம் ஏதும் இல்லாமல் பிறப்பு,  இறப்புச் சான்றிதழ்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.

அதேவேளையில், பிற இடங்களை எடுத்துக் கொண்டால், நேரில் சென்று அதற்காகக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் நடைமுறைதான் உள்ளது.


 இந்த முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் பிறப்பு - இறப்புத் தகவல்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஓராண்டுக்கு முன்னர் அமலானது.
 இதற்காக www.crstn.org என்ற முகவரியில் பிரத்யேக இணையதளப் பக்கம் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.


 அதன் கீழ், மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பதிவாகும் பிறப்பு - இறப்பு தகவல்கள் அனைத்தும் ஓராண்டாக பதிவேற்றம் செய்யப்பட்டன.
 
இருந்தபோதிலும், அந்த இணையதளத்தில் இருந்து பொது மக்கள் எவரும் அச்சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி இதுவரை இல்லாமல் இருந்து வந்தது.

இந்தச் சூழலில்தான், சம்பந்தப்பட்ட நபர்கள், அந்தச் சான்றிதழ்களை எங்கிருந்து வேண்டுமானாலும், எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:

பிறப்பு - இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை மூலம் இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டு முறைகேடுகள் குறைக்கப்படும். இதற்காக எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு - இறப்புக்கான சான்றிதழ்கள் மட்டுமே தற்போது இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. அதற்கு முந்தைய தரவுகள் அனைத்தும் அடுத்த சில மாதங்களுக்குள் கணினி மூலம் பதிவேற்றப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும்.

வரும் நாள்களில், க்யூஆர் - கோட் எனப்படும் பிரத்யேக குறியீடுடன் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.