மதிப்பெண்ணில் குளறுபடி கூடாது : ஆசிரியர்களுக்கு, சி.இ.ஓ.,க்கள் எச்சரிக்கை
பிளஸ் 1 வகுப்புக்கு, செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. அக மதிப்பெண்ணில் குளறுபடி செய்யக் கூடாது என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண்கள், பிளஸ் 2 முடிக்கும் போது கணக்கிடப்படாது; ஆனால், பிளஸ் 1 தேர்வில், தேர்ச்சி கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டில், பிளஸ் 1 தேர்வில், 8.47 லட்சம் பேர் பங்கேற்றனர்; அவர்களில், 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாதோரில், 23 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் தொடரவில்லை. இது குறித்து, அரசு தேர்வுதுறை விசாரணை நடத்தியது.அதில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு, பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான, அகமதிப்பெண் பூஜ்யம் வழங்கப்பட்டதை, அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பள்ளிக்கு, 75 சதவீதம் வருகை பதிவு உள்ள மாணவர்கள் மட்டும், தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, வருகை பதிவுக்காக, 3 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அதை கூட ஆசிரியர்கள் வழங்காதது ஏன் என, தேர்வு துறை விளக்கம் கேட்டது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 செய்முறை தேர்வு, நேற்று துவங்கியது. இரண்டு கட்டங்களாக செய்முறை தேர்வை நடத்த, பள்ளி கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அறிவுறுத்தல் அனுப்பியுள்ளனர்.அதன் விபரம்:பிளஸ் 1 மாணவர்களுக்கு, 2017 - 18ம் கல்வி ஆண்டில், அக மதிப்பெண்ணில் அலட்சியம் காட்டியதால், 11 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
நடப்பு கல்வி ஆண்டில், செய்முறை தேர்வு துவங்கியுள்ள நிலையில், அக மதிப்பெண்ணில், குளறுபடி ஏற்பட்டு விடக் கூடாது.அகமதிப்பெண் பூஜ்யம் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது விசாரணை நடத்தப்படும். எனவே, அலட்சியம் காட்டாமல், செய்முறை தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment