Header Ads

Header ADS

இந்தியாவிலேயே முதல் முறையாக சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்ற பெண் வழக்கறிஞர்: பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது









அவருக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. இவர், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிநேகா(34). இவர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

சட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சிநேகா சாதி, மதம் அற்றவர் என திருப்பத்தூர்வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழை சமீபத்தில் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சிநேகா அடைந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பல்வேறு தரப்பினர் அவரை தொலைபேசி மூலமாகவும், நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து சிநேகாவின் கணவர் பார்த்திபராஜா நாளிதழுக்கு கூறும்போது," கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போராட்டம் என கூறலாம்.

நாங்கள் இருவரும் சாதி, மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள். எங்களது திருமணம் கடந்த 2005-ம் ஆண்டு தாலி மறுப்பு, சடங்கு மறுப்புடன் தான் நடைபெற்றது. இந்த திருமண பந்தத்தின் மூலம் குடும்ப நலனுக்காக எங்கள்சொந்த நலனை விட்டு கொடுப்பது என்றும், சமூக நலனுக்கான குடும்ப நலனை விட்டு கொடுப்பது என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். எனது மனைவி குழந்தையாக பள்ளியில் சேரும்போது, சாதி மதம் அற்றவர் எனசான்றிதழ் பெற்று, சட்டப்படிப்பு வரை படித்துள்ளார்.எங்களுக்கு ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம்,பவுத்தம் (புத்தர்) ஆகிய மதங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைத்துள்ளோம். எங்கள் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டு பள்ளியில் சேர்த்துள்ளோம்.
 
இதன் மூலம் அரசு இட ஒதுக்கீடு கிடைக்காது என்பது தெரியும். இட ஒதுக்கீடு மீது அதிக நம்பிக்கை இருந்தாலும், சாதி, மதம் இல்லாமல் இருப்பது முக்கியமாக கருதினோம். அதன் அடிப்படையில் தான் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெறகடந்த 10 ஆண்டுகளாக போராடி, தற்போது வெற்றி பெற்றுள்ளோம். ஆரம்பத்தில் இதுபோன்ற சான்றிதழ் கொடுக்க முடியாது எனக்கூறிய வருவாய்த் துறையினரிடம் பல்வேறு எடுத்துக்காட்டுகளை சமர்ப்பித்து சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிழை பெற்றுள்ளோம்" என்றார்.

இது குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, "சாதியை குறிப்பிடாமல் இதுவரை யாருக்கும் சான்றிதழ் வழங்கவில்லை. முதல் முறையாக வழக்கறிஞர் சிநேகாவுக்கு சாதி,மதம் அற்றவர்என்ற சான்றிதழ் வருவாய்த் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாணையில் இடம்உள்ளது. பல்வேறு அரசு அதிகாரிகளிடம் கருத்து கேட்ட பிறகே அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
 
சிநேகாவின் மூதாதையர்கள் சாதி,மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டு ஆவணங்களை காட்டியுள்ளதால், அதன் அடிப்படையில் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு சலுகைகள் அவருக்கு கிடைக்காது என்றாலும், இது போன்ற சான்றிதழ் வழங்க அரசாணையில் இடம் உள்ளது" என்றார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.