தமிழகம் முழுவதும் மார்ச் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் : தமிழக அரசு
தமிழகம் முழுவதும் மார்ச் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து முகாம் செயல்படும் என்றும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் 1000 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு
முழுவதும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஆனாலும், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை முற்றிலும் கைவிடாமல், இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டன. இதற்கிடையே சில காரணங்களால் பிப்ரவரி 3-ம் தேதி நடப்பதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர் பிப்ரவரி 2-வது வாரம் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
No comments
Post a Comment