Header Ads

Header ADS

ஆட்சியாளர்களுக்கு ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தை பற்றிய புரிதலும் இல்லை, அக்கறையும் இல்லை..------ வினவு பத்திரிக்கை!!!



இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

கடந்த 6 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமானது தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆயினும் இறுதி வெற்றி கிட்ட என்ன செய்வது...?
 
வினவு களச் செய்தியாளர் -

கடந்த 6 நாட்களாக நடந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 29.12.2018 அன்று இரவு பேச்சுவார்த்தையின் போது தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் திரு.கருப்பசாமி அவர்கள்ஊதிய முரண்பாடுகளை நீக்குவதற்கான ஒருநபர் குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது, எனவே, கோரிக்கைக் குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.”   இதைத் தொடர்ந்துதான் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.


போராட்டக்களத்தில் ஆசிரியர்கள்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கப் பொது செயலாளர் திரு.ராபர்ட் அவர்கள், “உறுதி கூறியபடி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், மீண்டும் எங்களை போராட்டத்துக்கு தள்ளாது என்றும் நம்புகிறேன்என கூறி போராட்டத்தை தற்காலிகமாக முடித்து வைப்பதாக கூறியுள்ளார்.

ஆனால், அரசு உறுதி கூறுவதும், அதை ஊத்தி மூடுவதும் புது விஷயமா என்றால் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக இப்படித்தான் அரசு உறுதிகூறி ஏமாற்றி வருகிறதென்பது ஆசிரியர்கள் அறிந்ததே.

பத்தாண்டுகளாக என்ன நடந்தது ?
 
6-வது ஊதியக்குழுவில்தான் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியைக் குறைத்து, மே 31, 2009 -க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370/- ரூபாயாக இருந்த அடிப்படை சம்பளத்தை, அதற்கு பின் சேர்ந்தவர்களுக்கு 5,200/- ரூபாயாக குறைத்து அறிவித்தது தமிழக அரசு.

அப்போதே, இடைநிலை ஆசிரியர்கள் இதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மேலும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு ஆயிரக்கணக்கில் பதிவுத்தபால்களும், -மெயில்களும் அனுப்பியுள்ளனர். இதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அடுத்தடுத்து,

ஜாக்டோ- ஜியோ, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள் வைப்பது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தைத் தொடங்கி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தனியாக போராடத் தொடங்கியுள்ளனர்.

2016-ஆம் ஆண்டில் 8 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
7-வது ஊதியக் குழு அமைக்கப்படும்போது, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.
7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த புதிய ஊதியத்தை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டம்.

2018 ஏப்ரலில் 4 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம்.
தற்போது கடந்த 2018 டிசம்பர் 23 -ஆம் தேதி டி.பி.-யில் போராட வந்த ஆசிரியர்களை தாம்பரம், மடிப்பாக்கம், பல்லாவரம் என மண்டபங்களில் அடைத்து வைத்து, அலைய வைத்தபின், கலைந்துபோக சொல்லி மிரட்டியது போலீசு.
 
போராட்டக்களத்தில் மயக்கமடைந்த ஆசிரியர் ஒருவர் மருத்துவ உதவிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்.
ஆனால், ஆசிரியர்கள் போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் டிபிஐ-யை முற்றுகையிட்டு போராட முயற்சித்தபோது, ராஜரத்னம் விளையாட்டு மைதானத்தில் அடைத்து வைத்தது. மீண்டும் ஆசிரியர்கள் விடாப்பிடியாகப் போராடித்தான் டி.பி..-வளாகத்துக்குள் வந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அதுமட்டுமின்றி, முதல்வருடன் பேச்சுவார்த்தை என ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டதோடு, “ஜனவரி 7-ஆம் தேதி வரை காத்திருங்கள், ஒரு நபர் கமிசன் அறிக்கை வந்துவிடும் கலைந்துபோங்கள்என கல்வி செயலர் பிரதீப் யாவ் மூலமாக மிரட்டப்பட்டனர்.

ஊடகங்களில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஊதிய முரண்பாடு களையப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், போராட்டக்குழுவினர் நேரில் சென்று, அதுபற்றி பேசியபோது, “தொலைக்காட்சிக்காக சொன்னா நம்பிட்டு வந்துருவீங்களா?” என திமிராகப் பேசியுள்ளார். இப்படி வெளிப்படையாக அறிவித்த வாக்குறுதியையே மதிக்காமல் காற்றில் பறக்க விட்டுவிட்டு, தற்போது 4 சுவருக்குள், ‘பரிசீலிக்கிறேன்என உறுதி கூறியிருப்பதை மட்டும் நிறைவேற்றிவிடுவார்களா?

இப்படி ஒவ்வொரு முறையும் வாக்குறுதிக் கொடுத்து ஏமாற்றி, கிடப்பில் போட்ட அரசுதான் இப்போதும் பரிசீலிக்கிறேன் என உறுதி கொடுத்துள்ளது.
 
போராட்டத்தின்போது, ஆசிரியர் ஒருவர் சொன்னார், “எங்கள் கோரிக்கை இழவு வீட்டிலுள்ள பிணம் போல கிடக்கிறது”. எடுத்துப்போட வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், வருத்தம் தெரிவிப்பதோடு சென்றுவிடுகின்றனர் என்றார்.

அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என யாருக்குமே ஆசிரியர்களின் வலியும், வேதனையும், தீர்வும் பொருட்டல்ல என்பதுதான் உண்மை. அந்த ஆசிரியர் குறிப்பிட்டதுபோல, ஆதரவு தெரிவுக்கும் கட்சிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம்
கொண்டு செல்ல முடியாதா?

ஊடகங்களால் போராட்டத்தின் நியாயத்தை மக்களுக்கு விளக்கிப் புரிய வைக்க முடியாதா? தனது சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகத்தான் போட்டியும், பேட்டியும். ஆனால், கல்வியைத் தனியார்மயமாக்கும் அரசின் கொள்கையை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் எப்படி அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற போராடும்?

உதாரணத்துக்கு, பச்சமுத்துவின் புதிய தலைமுறை, நியூஸ் 7 வைகுண்ட ராஜன், சன் டிவி கலாநிதிமாறன், மற்றும் ஏனைய ஊடகங்களின் முதலாளிக்கோ அரசுப் பள்ளிகளை காப்பாற்றுவதா நோக்கம்? இனியும் அரசையும், ஊடகங்களையும் நம்புவது முட்டாள்தனம்.
 
அரசின் நோக்கம்தான் என்ன?

இந்தப்போராட்டத்தை சீர்குலைப்பதும், ஆசிரியர்களின் மனவலிமையைக் குறைத்துஇனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லைஎன்ற விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளி மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்காதவாறு தடுப்பதும்தான் அரசின் நோக்கம். அரசு ஏன் இதை செய்ய வேண்டும்?

சற்று யோசித்துப் பாருங்கள். அரசின் செலவுகளை குறைப்பதற்காகத்தான் தகுதி குறைக்கப்பட்டு, சம்பளம் குறைக்கப்படுகிறது என 6-வது ஊதியக்குழுவில் சொன்னது. இப்போதும் இதை சொல்லித்தான் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை குறைத்து தனியாரிடம் தாரைவார்க்க தயாராகிறது.

அதானால்தான் சத்துணவு மையங்களை மூடுவது, குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூடுவது, பள்ளிகளை இணைப்பது என அரசுப்பள்ளிகளுக்கு பூட்டு போட்டுவிட்டு போகத் துடிக்கிறது. சம்பளத்தைக் குறைத்து இலாபத்தை பெருக்க நினைக்கும் முதலாளியைப் போலத்தான், அரசும் இன்று திட்டமிடுகிறது. அதனால்தான், ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்து வழங்கி, அவர்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ளது.

ஆனால், மறுபுறம் மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறது. எம்.எல்.-க்களுக்கு சம்பள உயர்வு, பதவியேற்றவுடனே அமைச்சர்களுக்கு புதிய கார்கள், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆயிரக்கணக்கான கோடி செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என வீணாக்குகிறது.

படிக்க:
அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு ! மற்றதை அப்புறம் பேசு !
குடிநீர் இல்லை கழிப்பறை இல்லை ! போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு !
 
தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு என சொல்லி கல்விக் கொள்ளையர்களுக்கு கொட்டிக் கொடுக்கிறது. ஆனால். ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான நிதியில் 1/3 பங்கு மட்டுமே ஒதுக்குகிறது.

ஆனால், மறைமுகமாக தனியாரை ஊக்குவித்து, வளர்த்துவிடும் அரசின் நோக்கமே அரசுப்பள்ளிகளை கைகழுவிவிட வேண்டுமென்பதுதான். பள்ளிகளை மட்டுமல்ல சேவைத்துறைகளான கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்தையும் தனியாரின் இலாபத்தை அதிகரிக்கக் கொடுத்து முதலாளிகளை வாழவைக்க நினைக்கிறது.

இதன் ஒரு பகுதிதான், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளத்தையும், மன அழுத்தத்தையும் கொடுத்து விரட்ட நினைப்பது. நிலைமை இவ்வாறு இருக்கையில், இந்த அரசிடமே மன்றாடி நம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியுமா? வேறு என்ன செய்வது என கேட்கிறீர்களா?

என்ன செய்வது?

6 நாட்களாக உணவருந்தாமல் தன்னை வதைத்துக் கொண்டும், 200-க்கும் மேற்பட்ட சக ஆசிரியர்கள் மயங்கி விழுந்தபோதும், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, பூரான் கடியிலும், தேள்கடியிலும், கொட்டும் பனியிலும், வெயிலிலும் கைக்குழந்தைகளுடனும் தீரத்துடன் போராடிய ஆசிரியர்கள் இன்று வெறுங்கையுடனும், மனக்கொதிப்புடனும், கோபத்துடனும்தான் வீடு திரும்பியுள்ளனர்.
 
இதை போராட்டத் தலைமை உணர்வதோடு, இதற்கேற்ப அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் ஆசிரியர்களின் நம்பிக்கையைப் பெற முடியாது என கருதுகிறோம்.

தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும், மெரினா போராட்டமும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் மட்டும் வெற்றி பெற்றதற்கு காரணம் அது உலக அளவில் பேசப்பட்டதும், அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்றதும்தான். மக்கள் சக்திக்கு மட்டுமே அரசையே அச்சுறுத்தும், அசைத்துப் பார்க்கும் வலிமை உள்ளது என மீண்டும் மீண்டும் வரலாறு நிரூபித்துள்ளது.

சீனாவிலும், ரஷ்யாவிலும் நடந்த மக்கள் புரட்சியாகட்டும், அமெரிக்காவின் வால்வீதி போராட்டம், தற்போது பிரான்சின் வீதிகளில் இறங்கி பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கான போராட்டம் என வெற்றி பெற்ற அனைத்து போராட்டங்களும் மக்கள் ஆதரவும் அவர்களது பங்களிப்பும் இருந்ததால்தான். இது எல்லா நாடுகளுக்கும், எல்லாக் கோரிக்கைகளுக்கும் பொருந்தும்.

தற்போதுகூட, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் போராடுவதும், மக்களுக்கு இப்போராட்டம் பற்றியோ,அதிலுள்ள நியாயமோ தெரியாததும்தான் அரசின் பலம், போராடியவர்களின் பலவீனம். அதனால்தான் இந்த அரசு போராட்டத்தைப் பற்றியே வாய்திறக்காமல் இருந்ததோடு, உளவுப்பிரிவு போலீசை போராட்டத்திற்குள் கலக்கவிட்டு போராடும் ஆசிரியர்களின் மனவலிமையை குலைக்க முயற்சித்து தோற்றது.

எனவே, போராட்டத்தின் நியாயம் என்ன என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகவுள்ளது. சில ஆசிரியர்கள் மட்டும் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்து கொண்டு, மற்ற ஆசிரியர்கள் தங்களது கோரிக்கையின் நியாயத்தை சிறு பிரசுரமாக, சுவரொட்டிகளாக, தட்டிகளாக, பதாகைகளாக அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லலாம். இதன்மூலம் மக்களும், தம் பிள்ளைகளின் நலனுக்காக அரசுப்பள்ளிகளை காப்பாற்ற களம் இறங்குவர்.

இதுவே, இந்த அரசுக்கு அச்சுறுத்தலாக அமையும், தீர்வை நோக்கி முன்னேற முடியும். மேலும், அரசுப் பள்ளிமேல் அக்கறையுள்ள முன்னாள், இன்னாள் பள்ளி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்கும்பட்சத்தில் இந்த இயக்கத்தை மிக எளிதாக தமிழகம் முழுவதும் பரப்ப இயலும்.
 
மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் விடுமுறை நாட்களில் மட்டும் போராடும் ஆசிரியர்களின் உணர்வை மதிக்கிறோம். ஆனால், அதேசமயம், படிப்பையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் ஆசிரியர்கள்தான் போராட்ட உணர்வையும் மாணவர்களுக்கு கற்றுத்தர முடியுமென நினைக்கிறோம்.

அதுமட்டுமின்றி, ஆசியர்களின் சம்பள உரிமைக்காகவும், மாணவர்களின் கல்வி பெறும் உரிமைக்கானதுமான இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் கூட்டணியே சரியானதும், வெற்றியடையச் செய்யக்கூடியதுமாகும்,

ஆசிரியர் நலனுக்கான-மாணவர் நலனுக்கான- எதிர்கால சமூகத்தினரின் நலனுக்கான- அரசுப் பள்ளிகளின் நலனுக்கான இந்தப் போராட்டத்தில் அதனால் பயன்பெறப்போகும் அனைவரும் கைகோர்ப்பதுதான் நியாயம் என நம்புகிறோம்.
 
இது எங்களது ஆலோசனை மட்டுமே. இதை செயல்படுத்துவது பற்றி முடிவெடுக்க வேண்டியது போராடும் ஆசிரியர்களும், அவர்களை வழிநடத்தும் போராட்டத் தலைமையும்தான்.

இருப்பினும் கடந்த ஆறு நாட்களாக போலீசின் அச்சுறுத்தலையும், அலைக்கழிப்பையும் மீறி உறுதியுடன் போராடிய ஆசிரியர்களுக்கு வினவு இணையதளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.