பணி நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, December 22, 2018

பணி நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை



பணி நேரத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்கச் சென்ற பள்ளித் தலைமையாசிரியர் , 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட மாசிநாயக்கனப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு மேல்நிலைப் பொதுத் தேர்வில் இந்தப் பள்ளி மாணவ, மாணவியர் யாரும் தேர்ச்சி பெறாத நிலையில், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, இந்தப் பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியின் தலைமையாசிரியர் குபேந்திரன் மற்றும் 7 ஆசிரியர்கள் பணியில் இல்லை. அவர்கள், பள்ளி வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்ட நிலையில், பெங்களூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்கச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, பணி நேரத்தில் திருமண நிகழ்வுக்குச் சென்றவர்கள் மீது 17(பி) என்ற பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டார். இதனால், நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை பாதிக்கப்படும் என சக ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டது பள்ளி கல்வித் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments: