பள்ளியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு பெற்றோர் மற்றும் உறுப்பினர்களை வரவழைப்பதற்கு தலைமை ஆசிரியரின் சிறப்புத் திட்டம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, December 20, 2018

பள்ளியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு பெற்றோர் மற்றும் உறுப்பினர்களை வரவழைப்பதற்கு தலைமை ஆசிரியரின் சிறப்புத் திட்டம்


பள்ளிக்கு பெற்றோரை வரவழைக்க தலைமை ஆசிரியரின் சிறப்புத் திட்டம்
 
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு பெற்றோர் மற்றும் உறுப்பினர்களை வரவழைப்பதற்கு இங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர் சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் விளைவாக 19 ம் தேதி (புதன்கிழமை) நடைபெற்ற இக் கூட்டத்தில் முழு அளவில் பெற்றோர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் அரசுப் பள்ளிகளில் பள்ளி  மேலாண்மைக் குழுக் கூட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது.
இக் கூட்டத்தில் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள், பள்ளி சுத்தம், கழிப்பறை, சுற்றுச் சுவர் உள்ளிட்டவற்றை பெற்றோர்கள் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டு இவற்றை மேம்பாடுத்த ஆலோசனைகள் வழங்கலாம். அடுத்த மாதக் கூட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் நிவிர்த்தி செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்ட இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.
 
மேலும் இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்த பள்ளிகளுக்கு 2018 நவம்பர் முதல் 2019 ஏப்ரல் வரைக்குமான 6 மாதத்திற்கு தலா ரூ.100 வீதம் ரூ.600 ம் வழங்கியுள்ளது.
பெற்றோர்கள் தினக் கூலிகளாக இருப்பதால் பெரும்பாலும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் உள்ளார்கள்.
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த கூட்டங்களில் சில பெற்றோர்கள் மட்டும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், முழு அளவில் பெற்றோரை இக் கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்க ஒரு திட்டத்தை அறிவித்தார்.
இதன்படி ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு. கூட்டத்திற்கு முதலாவதாக வரும் பெற்றோருக்குப் பரிசு.
6 மாதங்களும் தொடர்ச்சியாக வருகைபுரியும் பெற்றோருக்கு, ஏப்ரல் 2019 ல் நடைபெரும் கூட்டத்தில் குலுக்கல் முறையில் தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை தனது சொந்த செலவில் அறிவித்தார்.

இதன் விளைவாக 19 ம் தேதி (புதன்கிழமை) தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முழு அளவில் பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தங்களது குழந்தைகளின் கல்வி வளர்ச்சி குறித்தும், பள்ளியை மேலும் வளர்ச்சி பெற செய்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் வந்திருந்தவர்களின் பெயர்கள் தாளில் எழுதிப்போடப்பட்டு, குலுக்கல் முறையில் ஒரு பெற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி பொ.காளிஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கும் கூட்டத்திற்கு முதலாவதாக வந்த மகேஸ்வரி என்பவருக்கும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.
தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜூன் இந்த திட்டத்தைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் பாராட்டினர். ஆசிரியை கா.ரோஸ்லினா நன்றி கூறினார்.

No comments: