தகுதி இல்லாத ஆசிரியர் பட்டியல் வெளியிட பட்டதாரிகள் எதிர்பார்ப்பு!
தகுதி இல்லாத கலையாசிரியர் பட்டியலை வெளியிட்டு, களையெடுப்பதோடு, பள்ளிகளில் தகுதியானவர்களை பணியமர்த்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நுாறு மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில், கலையாசிரியர் நியமிக்க வேண்டுமென, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2012ல், 16 ஆயிரத்து, 548 பேர் பணி அமர்த்தப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாள் பணிபுரியும் இவர்களுக்கு, மாதம், 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
இப்பணியில், உரிய கல்வித்தகுதியின்றி பலர் பணிபுரிவதாக புகார் எழுந்தது. ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன், மாவட்டம் வாரியாக கலையாசிரியர்களின் கல்வி தகுதியை சரிபார்க்க உத்தரவிட்டார்.கோவை மாவட்டத்தில், 400 ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள், இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஆய்வு செய்யும் பணி நடப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தகுதியற்ற ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதோடு, கல்வி தகுதி கொண்ட பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கலைப்பாடங்களில் கல்வி தகுதி கொண்ட பலர், பணிவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ''இவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். தகுதியற்றவர்கள் பட்டியல் வெளியிட்டு, காலியிடங்கள் அறிவிக்க வேண்டும். தகுதியானவர்களிடம் விண்ணப்பம் பெற்று, பணிவாய்ப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.
No comments
Post a Comment