Header Ads

Header ADS

தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அவதி



ஆசிரியர்களுக்கு நடக்கும் தொடர் பயிற்சிகளால், அரையாண்டு தேர்வு நடத்த, ஆசிரியர்கள் இல்லாமல், தலைமை ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


சேலம் மாவட்டத்தில், பிளஸ் 1 வகுப்பு இரண்டாம் தொகுதி பாடப்புத்தகங்களுக்காக, ஒவ்வொரு பாட ஆசிரியர்களுக்கும், இரண்டு நாள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. டிச., 13, 14 மற்றும் 17,18 தேதிகளில், வேதியல் பாட ஆசிரியர்களுக்கு மேட்டுப்பட்டி, சேலம் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பயிற்சி நடைபெறுகிறது. மாணவியரிடையே சத்தான உணவு மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு பள்ளியிலிருந்து இரண்டு பெண் ஆசிரியர்களுக்கு, இரண்டு நாள் பயிற்சியளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, கற்றல் அடைவு மற்றும் தேசிய அடைவு ஆய்வுக்கான செயல்பாடுகள் குறித்து, பாடவாரியாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் தலா இரண்டு நாள் பயிற்சி, டிச., 13 முதல் வழங்கப்படுகிறது. மேற்கண்ட அத்தனை பயிற்சிகளும், அரையாண்டு தேர்வு நடத்தப்படும், டிச., 11 முதல், 22 வரை, நடக்கிறது. இதனால், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், குறைந்தது நான்கு ஆசிரியர்கள் வரை பயிற்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாமல், பள்ளி தலைமை ஆசிரியர்கள், தவிப்புக்குள்ளாகின்றனர்.
 
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு நடக்கும் நேரத்தில், தொடர் பயிற்சிகள் திட்டமிட்டிருப்பது கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி ஆசிரியர்களையும், பகுதிநேர பணியாளர்களையும் வைத்து, பலரும் தேர்வு நடத்துகின்றனர். தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களுக்கான சந்தேகங்களுக்கு விளக்கம் தர முடியாத நிலை உள்ளது. தேர்வு முடிந்த பின், இப்பயிற்சிகளை திட்டமிட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.