இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
ஊதிய
வேறுபாட்டை முறைப்படுத்தக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித்துறையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரே தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய வேறுபாடு நீடிக்கிறது. அதை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பதிவுமூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் சென்னையில் கூறியது:
ஒரு தகுதி, ஒரே பணி என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுவருகிறோம். பலகட்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் நடவடிக்கை எடுப்பதாக அரசுக்குப் பரிந்துரை கடிதம் வழங்கினார்.
ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தோம். இதற்கிடையே, ஊராட்சிப் பணியாளர்களுக்கு ஊதியத்தை முறைப்படுத்தி அரசு ஆணையிட்டுள்ளது. அதேபோல எங்களுக்கும் செய்ய வேண்டும் என்று கேட்டோம். ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்முதல்வரிடம் பேசி முடிவு எடுத்து அறிவிக்கிறோம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால், உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வரிடம் பேசிய பிறகு நல்ல முடிவு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இல்லை என்றால் மீண்டும் நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்க போகிறோம். அதனால், இன்று சென்னை வந்துள்ள ஆசிரியர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். அரசின் முடிவைப் பார்த்துவிட்டு போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் இவ்வாறு ராபர்ட் தெரிவித்தார்
No comments
Post a Comment