பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாது : யுஐடிஏஐ எச்சரிக்கை
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு (அட்மிஷன்) ஆதார் எண் கேட்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரித்துள்ளது. பள்ளிகளில் ஆதார் எண் கோருவது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லை என்பதற்காக எந்தவொரு குழந்தைக்கும் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படாது என்பதை தனியார் பள்ளிகளின் அதிகாரிகளும், நிர்வாகத்தினரும் உறுதி செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ அறிவுறுத்தியுள்ளது.தில்லியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்புகள் மற்றும் தொடக்கநிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதில் சில பள்ளிகள் மாணவர்களை சேர்ப்பதற்கு ஆதார் எண் கேட்பதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து, தங்களுக்கு தெரியவந்திருப்பதாகவும், ஆதார் எண் பெறக் கூடாதுஎன்றும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.அந்த ஆணையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே இதுதொடர்பாகக் கூறுகையில், இது சரியல்ல. பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போதும், பிற நடவடிக்கைகளின் போதும் ஆதார் தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. இன்னும் சொல்லப் போனால், ஆதார் இல்லாமலேயே குழந்தைகளை பள்ளிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆதார் எண் கிடைத்துள்ளதா என்பதை சிறப்பு முகாம் ஒன்றை நடத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.ஆதார் எண் கட்டாயம் எனக் கூறும் தனியார் பள்ளிகள் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு அஜய் பூஷண் பதில்அளிக்கையில், அது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்றார்.
உச்சநீதிமன்ற உத்தரவு:
ஆதாரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தபோது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆதார் செல்லும் என தெரிவித்தது.அரசின் நலத்திட்டங்கள், பான் கார்டு போன்ற சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் என்ற போதிலும், வங்கிக் கணக்கு, சிம் கார்டு, மாணவர் சேர்க்கை, மத்திய, மாநில அரசுகளின் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகள் போன்ற விஷயங்களுக்கு ஆதார் கட்டாயமல்ல என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments
Post a Comment