ஊதிய முரண்பாடு... ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் கைது! 'போராட்டம் ஓயாது' என எச்சரிக்கை
2009 ஜூன் மாதத்துக்கு முன் வேலைக்குச் சேர்ந்தவருக்கும், அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கும் 3,770 ரூபாய் ஊதிய முரண்பாடு
ஊதிய
முரண்பாடுகளைக் களையக் கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் அரசாணைக்குப் பிறகு, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே பெரிய அளவிலான ஊதிய முரண்பாடுகள் நிலவி வருகின்றன. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையவேண்டி, இம்மாத இறுதியில் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், 2009 மற்றும் டெட் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்புப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த ஆசிரியர்கள், சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டபோது, இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் உள்பட ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களைக் கைது செய்து ராஜரத்தினம் அரங்கத்தில் காவல் துறையினர் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “மத்திய மாநில ஆசிரியர்களுக்கு இடையே மட்டும் ஊதிய முரண்பாடுகள் நிலவவில்லை, தமிழக ஆசிரியர்களுக்குக்கிடையே 2009 ஜூன் மாதத்துக்கு முன் வேலைக்குச் சேர்ந்தவருக்கும், அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கும் இடையே 3,770 ரூபாய் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களையச் சொல்லி ஏற்கெனவே பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டோம். ஆனாலும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நாங்கள் டிசம்பர் 23-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம்.
முதல்வர் எங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எனவே, போராட்டத்தை ஒருநாள் தள்ளிவையுங்கள் என அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து போராட்டத்தை ஒரு நாள் தள்ளிவைத்தோம். முதல்வர் 24-ம் தேதி மதியம் 2 மணிக்கு எங்களைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்த நிலையில், மீண்டும் அவர் வராமல் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளரே பேச்சுவார்த்தைக்கு வந்ததை அடுத்து, நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், “எங்களுக்கு போராட்டங்களை விடவும் கோரிக்கைகள் நிறைவேறுவது முக்கியம் என்பதால், போராட்டத்தை ஒரு நாள் தள்ளி வைத்துக் காத்திருப்புப் போராட்டத்தை அறிவித்தோம். ஆனால் தமிழக அரசு, எங்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்கவில்லை. தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே 15,000 ரூபாய்க்கு அதிகமாக ஊதிய முரண்பாடு இருக்கிறது. 6000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இங்குக் கைதாகி உள்ளோம். எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை நாங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களின் ஒரே கோரிக்கை, ‘சம வேலைக்கு; சம ஊதியம்’ அது நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது” என்று தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment