ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வாங்குவதில் சிக்கல்"
ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயாலளர் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி பேசும் போது."ஆசிரியர்கள் ஒரே பதவியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் நிறைவு செய்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகிறது. அதே போல் தங்களது கல்வி தரத்தை உயர்த்த அஞ்சல் வழியில் உயர்கல்வி பயின்றால் துறை அனுமதி பெற வேண்டும்.
ஏற்கெனவே உயர்கல்வி பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் இருந்து வந்தது. இதில் பல்வேறு நிர்வாக சிக்கல் ஏற்பட்டதால், தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்கள் தாங்கள் பயின்ற உர்கல்விக்கு பின்னேற்பு பெற முடியாமல் இன்றளவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உயர்கல்வி பயின்றவர்களுக்கு பின் அனுமதி வழங்க வேண்டுமென பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இது கல்வித்துறை செயலரின் பரிசீலனையில் உள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்க சில ஆண்டுகளுக்கு முன் வட்டார கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கலாம் என கல்வித்துறை மாற்றி உத்தரவிட்டது.
ஆனால், 2018 மே-18ல் வெளியிடப்பட்ட அரசாணை 101ன் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து பணப்பலன்களை அளிப்பது தவிர்த்து மற்ற அதிகாரங்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனால் சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் உயர்கல்விக்கான முன் அனுமதி பெறும் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலகமும் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றி தேவையற்ற காரணங்களை கூறி ஆசிரியர்களின் கோரிக்கை விண்ணப்பங்கள் திருப்பி
விடுகின்றன. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு தேவையற்ற கால தாமதமும் ஏற்படுகிறது. இதனால் உயர் கல்வியை தொடர்வதா என்ற குழப்பமும் ஏற்படுகிறது.
மேலும் ஆசிரியர்களின் பணப்பலனும் தாமதப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கோரும் கோப்புகள் மாத கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கண்ட கோப்புகளும் தாமதப்படுவதால் அலுவலகங்ளில் தேவையற்ற நிர்வாக குழப்பம் ஏற்பட வழி ஏற்படும். எனவே முன்னதாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை, சிறப்பு நிலை, முன் அனுமதி வழங்கும் அதிகாரங்களை திரும்ப வழங்க வேண்டுமென கல்வி துறைக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.
மொத்தத்தில் கல்வி துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரசாணை 100 மற்றும் 101 ஆகியவற்றை ரத்து செய்வதுடன் அதிக எண்ணிக்கையுள்ள பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்ட தொடக்கக்கல்வி துறை மாவட்ட அளவிலும் தனித்துறையாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். ஜாக்டோ ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளிலும் இதனை இணைத்துள்ளோம் என்கிறார்.
No comments
Post a Comment