பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்தவை 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 16, 2018

பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்தவை 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது



ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3894 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் சரண் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1.8.2017 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி  ஆசிரியர்களுக்கான பணியாளர் நியமனம் மேற்கொள்ளப்பட்டதில் பாடவாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்களை சரண் செய்து இயக்குநரின் பொது தொகுப்பிற்கு ஒப்படைக்க அந்தந்த மாவட்ட கல்வி  அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.அதன் அடிப்படையில் ஆசிரியர்களின்றி உள்ள உபரி காலி பணியிடங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் ஒப்படைக்கப்பட்டு பள்ளி கல்வி  இயக்குநரின் பொது தொகுப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது.
 
இதனை ஏற்றுக்கொண்டு பள்ளி கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அரசு, நகராட்சி,உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களின் உபரி காலி பணியிடங்கள் 3894 என பட்டியலிடப்பட்டு சரண் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் 686, ஆங்கிலம்  334, கணிதம் 676, அறிவியல் 1177, சமூக அறிவில் 690, இதர பாட பிரிவுகள் 66 ஆசிரியர் பணியிடங்களும் உபரியாகியுள்ளன. மேலும் இடைநிலை ஆசிரியர் பிரிவில் 265 ஆசிரியர்கள் உபரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 465,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 439 பணியிடங்கள் ஆசிரியர்கள் இல்லாமல் உபரி என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த காலி பணியிடங்களை இனி வரும் காலங்களில் பள்ளி  கல்வித்துறை சார்பில் நடைபெறுகின்ற ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வின்போது காலி பணியிடங்களாக காண்பிக்ககூடாது என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரால் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இதனை கொண்டு செல்வதுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பராமரிக்கப்படுகின்ற அளவை பதிவேட்டில் (ஸ்கேல்ரெஜிஸ்டர்) திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று  பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த சரண்டர் செய்யப்பட்ட பணியிடங்களை புதியதாக நியமிக்கப்படும் கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கு பயன்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 800க்கும்  மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சார அடிப்படையில் இந்த பணியிடங்கள் குறைவு  ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: