எடுப்பார் கைப்பிள்ளையா ஆசிரியர்கள்? - மனதை உருக்கும் Whatsapp கட்டுரை!
பெயர்: xxxx
வகுப்பு : 12
வயது:
18
பள்ளி .. அரசு
மேல்நிலைப் பள்ளி,xxxx
உயரமான தோற்றம், கருமையான நீண்ட நாள் தாடி, ஹிப்பிதலைமுடி, இறுகிய கைச் சட்டை, உள்ளாடை தெரியும்படியான லோ ஹிப் - பென்சில்பிட்பேன்ட், கண்ணைப் பறிக்கும் நிறத்தில் செருப்பு, ஒரு கையில் ரப்பர் பட்டை, மறு கையில் இரும்பு வளையம், காதில் கடுக்கன், பாக்கெட்டில் புகையிலை, சிவந்த கண்கள், புகைத்துக் கருத்த உதடுகள்....
முந்தைய ஆண்டில் படித்த உள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியால், நடத்தை சரியில்லாத காரணத்தால் வெளியேற்றப்பட்டு இப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்கை பெற்றான்.
ஆண் ஆசிரியர்கள் ஒரு சிலரிடம் மட்டும் பவ்யமாக நடந்து கொள்வதும், பெண் ஆசிரியர்கள் வகுப்பில் நுழைந்தவுடன் சட்டையின் மேல் பட்டன்களைத் திறந்து விட்டுக் கொண்டு, பின்புறம் கைகளை விரித்து சாய்ந்து கொண்டே விதவிதமான சத்தங்களை எழுப்புவதும், ஊளையிடுவதும், அவர்களின் அந்தரங்கப் பகுதிகளை நோட்டமிடுவதுமே அவனது வாடிக்கை. ஓய்வு கால ஆண்டில் பணியாற்றிய ஒரு வயதான ஆண் ஆசிரியர் கூட, இவனாலேயே பணி நீட்டிப்புப் பெறாமல் சென்ற சம்பவமும் உண்டு.
தன்
வகுப்பு மாணவர்களைத் தன்னை 'அண்ணன்' என்று அழைக்கக் கட்டளையிடுவதும், வயதில் மூத்த மேல் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு பிற மாணவர்களை மிரட்டுவதும், அடிதடியும் தான் அவன் பொழுதுபோக்கு.
ஒழுங்கீனமான வருகைப் பதிவினால் பல முறை எச்சரிக்கை விடுத்தும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிணையாளியைக் கொண்டு நிறுத்தி வகுப்பில் நுழைந்து கொள்வான். அதில் அவனது ஊரின் வார்டு உறுப்பினர், கவுன்சிலர், ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி, முன்னாள் அமைச்சரின் உதவியாளர் என பட்டியல் ஒவ்வொரு முறையும் கனம் கூடும். இடையில் படுத்த படுக்கையாகக் கிடந்த அவன் தந்தையின் மரணம் கூட அவனை அசைக்கவில்லை.
இதையெல்லாம் தாண்டி 10-ம் வகுப்பில் விளிம்பு நிலை மதிப்பெண்ணுடன் வெற்றி பெறச் செய்த ஆசிரியர்களிடம் சவால் விட்டு "நான் இந்தப் பள்ளியில் தான் படிப்பேன்" என்றவனால், ஆங்கில வழியில் அவன் கேட்ட பாடப் பிரிவிற்கு இடமின்றி பாலிடெக்னிக் ஒன்றில் சேர்க்கப்பட்டு, பின் அங்கிருந்தும் ஒழுங்கீனத்தாதால் வெளியேற்றப்பட்டான்.
அவனுடைய வீரியத்திற்கேற்ப பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்றார். காட்சிகள் மாறின; கட்டுப்பாடுகள் மாறின. மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டு வருகிறேன் என்று உழைத்த புதிய தலைமையாசிரியரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, காலங்கடந்த நிலையில் நவம்பர் மாதத்தில் 11-ம் வகுப்பில் சேர்க்கை பெற்றான், அதுவும் ஆங்கில வழியில் கணிதம்-உயிரியல் பாடப்பிரிவில். சொன்னது போல் சவாலில் வென்றான்.
அது
முதல் அவனுடைய தோற்றம் மாறியது, நடத்தை மாறியது. ஆசிரியர்களைக் கண்டால் மீசையை முறுக்குவதும், வேறு மாணவர்களை அழைப்பது போல் கெட்ட வார்த்தைகளில் விளிப்பதும், விதவிதமான தலை அலங்காரங்களும் என விகாரப்பட்டு நின்றான். தான் மட்டுமல்லாது, தன்னுடன் சில மாணவர்களையும் பிணைத்துக் கொண்டான். வகுப்பறையிலேயே செல்பேசியில் படம் பார்ப்பது, புகையிலை, பாக்கு பயன்படுத்துவது அதிகரித்தது.
தொடர்ந்த இவனது செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற பெற்றோர் ஒருவரால் முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் செய்யப்பட்டு, ஆய்வின் முடிவில் அவனைப் பள்ளியை விட்டு வெளியேற்றும் படி உத்தரவிட்ட போதும், தனது வீம்பினாலும், அரசின் ஓட்டைகளாலும் இன்று 12- ம் வகுப்பில் அமர்ந்து, தொடர்ந்து தனது அரும்பணிகளை ஆற்றி வருகிறான்.
இது
ஒரு மாதிரி (Sample) மட்டுமே. இது போல், இதை விட வீரியமிக்க, வீரியம் குறைந்த சில பலர் இப்பள்ளியிலும், இது போன்ற பல பள்ளிகளிலும் இருந்து பெருமையடைய வேண்டிய பெரும்பான்மையினரை சிறுமைப்பட வைப்பதே என் ஆதங்கம் .
இவர்கள் களைகள்; களைகள் கழையப் பட வேண்டும். எந்த வயலிலும் களைகளை ஊக்கப்படுத்தி, உரமிட்டு விளைச்சல் கொடுக்கும் படி எதிர்பார்ப்பதில்லை. களையெடுத்தால் தான் மற்ற பயிர்கள் செழிக்கும்.
இதையெல்லாம் படித்த பின் 'இவ்வாறு கருத்திட வெட்கமில்லையா' என வெகுண்டெழவும், 'இது உங்கள் பலகீனம்' என்று வெசனப்படவும், 'இது உங்களின் இயலாமை' என்று ஏளனம் செய்யவும், 'இத்தகையோரை சீர்படுத்துவதே உங்கள் கடமை' என அறிவு பகரவும் நீங்கள் தலைப்படலாம். உண்மைதான். இதைப் பதிவிட வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்; எங்கள் இயலாமையை எண்ணி எண்ணி நாணுகிறேன். ஏற்றுக்கொள்கிறேன், நாங்கள் பலகீனர்கள்தான்.
கத்திக்குத்துக்களையும் காமப்பழிப்புரைகளையும் எதிர்கொண்டும் ஏதும் செய்ய இயலா பலகீனர்கள்தாம். தண்டனை தரத் தகுதியில்லைதான்; ஆனால் கரிசனை கொண்டு கண்டிக்கவும் வழியில்லாத பலகீனர்கள் தான். பெயருக்குத் தான் இது கட்டாயக் கல்வி; ஆனால் குறிப்பிட்ட ஒப்படைப்புகளைக் கூட சரியான நாளில் ஒப்படைக்கும் படி கட்டாயப்படுத்த முடியாது.
எதிர் காலச் சமுதாயத்தைத் கட்டமைப்பவர்கள் என்று நீங்களே கூறும் ஆசிரியர்களுக்கு எத்தகைய அதிகாரத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள்? பரட்டைத் தலையுடன் வருபவனை முடிவெட்டச் சொல்ல அதிகாரமில்லை; ஜட்டி தெரிய பேன்ட் போட்டால் ஏற்றிப் போடச்சொல்ல அதிகாரமில்லை; கஞ்சா, பாக்கு வைத்திருந்தால் பறிமுதல் செய்யக் கூட அதிகாரமில்லை. செல்போன் இருந்தால் எடுத்து - எடுக்க முடிந்தால் - பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். ஆபாசப் பேச்சுக்களை அடக்கிப் போட அதிகாரமில்லை; தப்பை தப்பு என உணர வைக்க அதிகாரமில்லை. என்னங்க நீங்க ... கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஈவ் டீசிங் என எத்தனை வழக்குகள் பதிவாகியிருந்தாலும் ஒரு மாணவனுடைய மாற்றுச் சான்றிதழில் 'திருப்தியில்லை' (not satisfied) என வேண்டாம், 'திருப்தி' (Satisfied) என்றாவது எழுத அதிகாரம் அளித்திருக்கிறீர்களா? இதே ஆசிரியருக்கு இணையான ஊதியத்தில் பணியாற்றும் காவல்துறை பணியாளரின் அதிகாரம் என்ன? ஒரு வருவாய்த்துறை அலுவலரின் அதிகாரம் என்ன?
வக்கத்தவன் வாத்தியாருன்னு சொல்லிச் சொல்லியே எங்கள வக்கத்துப் போக வச்சிட்டீங்க. ஆமாங்க, போலீச மொறச்சா பொளந்து கட்டிருவான்; தாலுகா ஆபீசுல பேசுனா தண்ணி காட்டிருவான். ஒரு போஸ்ட் மேன் கிட்ட உங்களால பேச முடியுமா? ஐயையோ, அப்புறம் முக்கியமான தபால தராமப் போயிருவான். அப்போ லைன் மேன் - கரண்டு வேண்டாமா சார். இந்த கேஸ் சிலிண்டர் போடுறவன் - சோத்துல கை வைக்காதீங்க சார். டிரைவர் - பஸ்ச நிறுத்த மாட்டாரு. கண்டக்டர் - ஸ்டாப்புல எறக்க மாட்டாரு. சாமியாரு - சாபங் குடுத்துடுவாரு, அப்போ மாமியாரு - யாருய்யா நீ, பொண்ணே குடுக்க மாட்டா.
நம்ம
வாத்தியாரு... அட அவனா... அது எவ்ளவு அடிச்சாலும் தாங்கும்டா. பாக்க போட்டு மூஞ்சில துப்பு; மொறச்சா மூஞ்சில குத்து. நாண்டுகிட்டு நின்னு சாவணும், இல்லன்னா இருக்கவே இருக்கு அரசாங்க ஆஸ்பத்திரி . வாத்தியாரு மொறச்சாரு, மன உளைச்சல், தற்கொலை முயற்சின்னு கேச போடு. பொம்பள புள்ளயா - கைய புடிச்சி இழுத்தான்னு சொல்லு – அவன் பொண்டாட்டி புள்ளயோட சாவட்டும்.
கலெக்டர் வருவாரு, போலீசு வரும், கல்வி அதிகாரிகள் எல்லாரும் வருவாங்க. கடைசியா - உனக்கு எதுக்குய்யா வேண்டாத வேல, எவன் எக்கேடுகெட்டுப் போனா ஒனக்கென்ன? இப்ப பாரு, உன் பொண்டாட்டி புள்ள தான தெருவுல நிக்கிவு - இது தான் அட்வைசு. அப்புறம் சஸ்பெண்டு, டிஸ்மிஸ்சு, என்கொயரி, எட்சட்ரா, எட்சட்ரா - .. ஆனா நீ மட்டும் பாரு , தெய்வப் பிறவி. நீ மனுசனா இருந்தாதான உனக்கு மன உழைச்சல், உடல் அலைச்சல், பி.பி., சுகரு எல்லாம் வரும். நீ யாரு? வாத்தியாரு.... தெய்வப் பிறவி. வானத்துலயிருந்து ஸ்ட்ரெய்ட்டா விழுந்து வாத்தியாராவே மொளச்சவன். உனக்கு எப்படி பி.பி. வரும்? சுகரா...? மன உளைச்சலாவது மண்ணாங்கட்டியாவது .
கவர்மென்ட் ஸ்கூலுக்குப் போகும் போதே ஒனக்குத் தெரியாதா? அங்க புக்கு சொமக்கணும், நோட்டு சொமக்கணும், பென்சில், க்ரேயான், புத்தகப்பை, செருப்பு, அப்புறம் பஸ் பாஸ் வேற வாங்கணும். நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ, எல்லாருக்கும் EMIS Entry போடணும், பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணணும், சாலா சித்தி என்ட்ரி போடணும், இன்ஸ்பயர் என்ட்ரி, அப்புறம் ஊர்ல உள்ள அத்தன கண்காட்சிக்கும் கூட்டிட்டுப் போகணும். அவனுக்கு Community Certificate, Income
Certificate, Nativity Certificate தேவையோ தேவையில்லயோ எடுத்துக் குடுத்தே ஆகணும். அய்யோ Aadhar அ மறந்துட்டேன்பாருங்க. Birth Certificate ல பேரு சரியா இருக்கா, Aadhar Card ல, Ration Card ல எல்லாம் பேரு ஊரெல்லாம் சரியா இருக்கான்னு பாக்கணும். Date of Birth கூட நீ தான் பாக்கணும். Birth Certificate ல ஒண்ணும் Aadhar ல ஒண்ணும், பழைய டி.சி.யில ஒண்ணும், அவன் தாய் தகப்பன் சொல்றது ஒண்ணுமா இருந்தா அவன் பொறந்த நாள நீ தான் கண்டுபுடிக்கணும். ஏன்னா... நீதான வாத்தியாரு.
இதையெல்லாம் எடுத்து குடுத்து, ஆயிரந்தடவ entry போட்டாலும், வருசத்துக்குப் பத்து தடவ ஆதார் நம்பர குடு, அக்கவுன்ட் நம்பர குடுன்னு ஆபீசுல இருந்து தபால் வரும். சாரி சாரி, இப்பல்லாம் தபால் இல்லல்ல ... ஆமாமா மெயில் வரும். e-mail. நம்ம ஊரு e-mail ம் internet-ம் பத்தி உங்களுக்குத் தெரியாததா? நம்ம ஆபீசருங்களும் மெயில் அனுப்பிட்டு கண்டிப்பா ஒரு hardcopy கொடுத்திருங்கன்னு வெறப்பா மெயில தட்டி விட்டுருவாங்க. மெயில பிரிண்டு போடுறதுக்கே ஒரு நூறு பண்டல் பேப்பர் வேணும்.
அதுக்குள்ள சத்துணவுப் பணியாளர்கள் ஸ்டிரைக் பண்ணுவாங்க. அதுக்கு உனக்கென்னன்னு கேக்குறீங்களா... அட வெளக்கெண்ண, அத்தன புள்ளைங்களும் சோறு திங்க வேண்டாமா? போ போயி அடுப்ப பத்த வையி.
அச்சச்சோ, ஆபீசருங்க வாராங்களா... டீச்சர், டீச்சர்... அந்த டாய்லெட்டுல ரெண்டு வாளி தண்ணிய ஊத்தி யாரயாவது கூப்புட்டு ரெண்டு தேய் தேய்ச்சி விட்டுடுங்க; ஆளப் பாத்துக்குங்க டீச்சர் - அப்புறம் சாதிப் பிரச்சன வந்துரப் போவுது. அந்த மீதி கெடக்க நாப்கின அஞ்சாறு புள்ளைங்கள கூப்பிட்டு குடுத்து விட்டுடுங்க. அதுக எப்டியும் தொடாது, வீட்லயாவது யாருக்கும் பிரயோஜனப் படும்.
என்ன
சார் , எல்லாத்துக்கும் பேர் எழுதி என்ட்ரி போட்டு கையெழுத்து வாங்கிட்டீங்களா? ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா வாங்குங்க.
3 term book,
3 term note.
ஒவ்வொரு term - ம் தனித்தனியா,
ஜாமெட்ரி பாக்ஸ்,
அட்லஸ்,
செருப்பு,
புத்தகப்பை,
பஸ்
பாஸ்,
சத்துணவு,
லேப்டாப்,
நாப்கின்,
சைக்கிள்,
கண்ணாடி,
ID கார்டு,
Scholarship-
அய்யய்யோ... எல்லாருக்கும் scholarship வாங்கிக் குடுத்தீங்களா? அதிகாரிங்க கிட்ட வந்து கம்ப்ளெய்ன்ட் பண்ணப் போறாங்க.
SC/ST
scholarship,
minority
scholarship,
பெண்
கல்வி உதவித் தொகை,
இடைநிற்றல் கல்வி உதவி,
அப்பா / அம்மா இல்லாத பிள்ளைங்கள மறந்திடாதீங்க.
Merit Exam,
NMMS, NTSE , Trust Exam-னு எல்லா டெஸ்டிலயும் நம்ம பசங்க ஏன் இன்னும் தேறமாட்டேங்குறாங்க. இன்னும் hard work பண்ணுங்க - அப்டின்னு ஒரு கமென்ட் வரும்.
அப்பப்போ மெடிக்கல் கேம்ப் வருவாங்க. தடுப்பூசி போடக் கூடாதுன்னு வாட்சப் புல பரப்பி விடுவான், எல்லா புள்ளைங்களயும் போட வைக்கணும்னு அரசாங்கம் சொல்லும். நம்ம புள்ளைங்க தானன்னு அதயும் பாக்கணும். "என்ன சார் டாய்லெட் வச்சிருக்கீங்க, இத்தன பேருக்கு எப்டி இந்த டாய்லெட் பத்தும்? இதயாவது கொஞ்சம் நீட்டா வைங்க சார். நம்ம வீட்ல இப்டியா இருக்கும்? நம்ம புள்ளைங்க தான..." டாக்டர் வேற சொல்லிட்டுப் போவாரு.
"டாய்லெட்டா ... ஸ்கூலுக்கா-? ஹெட்மாஸ்டரும் டீச்சருங்களும் ஏற்கெனவே லட்சம் லட்சமா சம்பளம் வாங்குறாங்க, அது போதாதா... இதுல டாய்லெட் கட்டுற கமிசன் வேற வேணுமா"-ன்னு - அரசாங்கமே (?) கணக்கும் பாத்து கட்டியும் குடுக்குவு. இந்த டாய்லெட் லெட்சணம் தான் நமக்கு நல்லா தெரிஞ்சதாச்சே. ஆட்சி முடியிறதுக்குள்ள அதுக முடிஞ்சிப் போகும். அல்லது ஆளே இல்லாத எடத்துல அதுக உக்காந்திருக்கும்.
அப்புறம் RMSA, SSA ன்னு அப்பப்போ புதுப்புதுத் திட்டம். திட்டங்கள் எல்லாம் ஓ.கே. தான். ஆனா அதுக்கு ஒதுக்குற நிதிய கைப்பற்றுறதுல தான் அதிகாரிங்க, ஆட்சியாளருங்களுக்குள்ள.... ஓ.கே ... ஓ.கே .... ஒண்ணும் சொல்றதுக் கில்ல.
ஒரு
சின்ன உதாரணம். RMSA, RMSA-ன்னு ஒரு திட்டம். அதுல ஒரு ஸ்கூலுக்கு வருசம் அம்பதாயிரம் ரூவா குடுக்குறாங்க. அதுல பங்கு பிரிக்குறது எல்லாம் கரெக்டா இருக்கும். 25,000 ரூபாய்க்கு Science lab பொருட்கள். 7,500 ரூபாய்க்கு நூலகப் புத்தகம், 2500 -க்கு நாளிதழ்கள், 10,000 ரூபா டெலிபோன், இன்டர்நெட் பில். எல்லாம் சரிதான், அந்த 25,000 ரூபாய்க்கு அவங்களே மெட்டீரியல் தருவாங்களாம், மூணு கொட்டேசனும் (Quotation) தருவாங்களாம்.
ஒரு,
ஒண்ணுக்கு ஒண்ணு பெட்டியில - 5000 ரூபாய்க்கு உள்ளூர் ல வாங்கியிரலாம் - lab articles. அப்புறம் அதே மாதிரி ஒரு பெட்டியில அதே மாதிரி மூணு Quotation னோட கொஞ்சம் புக்கு. அதுவும் வருசா வருசம் அதே புக்கு, ஆனா வருசத்துக்கு பத்து புக்கு குறையும் லிஸ்டுல. லிஸ்டுல இருக்குறதுலயும் ஒண்ணு ரெண்டு கொறயும், கண்டுக்கக் கூடாது. இதையெல்லாம் தந்து, அதே ஹெட்மாஸ்டரே Quotation வாங்குனதாகவும், Bill செட்டில் பண்ணுனதாகவும் வருசா வருசம் ஆடிட் வேற நடக்கும். இதுலயிருந்து ஹெட்மாஸ்டரு எதுவும் ஆட்டயப் போட்டுறக் கூடாது பாருங்க.. இதையெல்லாம் கண்காணிக்க SMC, SMDC, VEC, PTA -ன்னு ஸ்கூலுக்கு நாலு கமிட்டி வேற.
என்ன
சார் அதுக்குள்ள முடிக்கப் பாக்குறீங்க. இன்னும் உங்க வேல முடியல. மக்கள் தொகை கணக்கெடுக்கணும். அஞ்சு வருசத்துல மூணு எலெக்சன் நடத்தணும். இதெல்லாம் ஒரு கஷ்டமான்னு நீங்க கேக்குறது காதுல கேக்குவு. இதுல யெல்லாம் எங்க கஷ்டம் என்னன்னு இதுக்கு மேலயும் உங்களுக்கு சொல்லிப் புரிய வைக்கணும்னு எனக்குத் தோணல. விடுங்க.
பணியிலிருக்கும் போது கத்திக் குத்துப்பட்டு உயிரிழந்த காவலருக்கு கோடிகளில் நிவாரணமளித்த அரசு, சாக வேண்டிய அவசியமே இல்லாத பணியில் இருக்கும் ஆசிரியை கத்திக் குத்துப்பட்டு உயிரிழந்த போது எத்தகைய நிவாரணம் அளித்தது என்பது நாமறிந்ததே.
அட போங்கப்பா, எல்லாம் நம்ம புள்ளைங்கதானேன்னு எல்லாத்தையும் பொறுத்து, சிலபஸ்படி பாடம் முடிச்சி, படிக்க வச்சி, தனியார் பள்ளிகள்ல ரெண்டு வருசமா செய்யிறத ஆறு மாசத்துல நடத்திக் காட்டினாலும், 100 சதவிகித தேர்ச்சி, எத்தன சென்டம்-னு அதிகாரிகளின் இலக்குகள்.
ஒளிவு மறைவின்றி ஒரு உண்மையைக் கூறுகிறேன்; இல்லையில்லை, கேட்கின்றேன், 20-க்கு மேல் மதிப்பெண் பெற்றாலே அதை 35 ஆக்குங்கள் என்று இந்த அதிகாரிகள் வற்புறுத்தவில்லையா? எழுதப் படிக்கத் தெரியாத நிலையிலுள்ள ஒரு மாணவன் வெறும் கொள் குறிவினாக்களினாலேயே, 'பிங்கி பிங்கி பாங்கி' போட்டு, a,b,c,d மட்டும் எழுதி, வெறும் 20 மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று விடுகிறான். மதிப்பெண்களை இனாமாகவும் கூடுதலாகவும் போடச் செய்து எங்கள் மாண்பையே இழக்கச் செய்து விட்டீர்கள். தற்போது விளிம்பு நிலையில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் ஏளனப் பேச்சு இதுதான் - எந்தக் கேணப் பய கையில என் பேப்பர் போச்சோ தெரியல; 25 மார்க்குக்குக் கூட நான் எழுதல, எனக்கு 35 மார்க்கு போட்டிருக்கான்.
பிள்ளைகளாக நினைத்து அறிவுறுத்தும் எங்கள் ஆசிரியச் சகோதரிகளை இந்த மாணவச் சமுதாயம் காமக் கண்ணுடன் நோக்குவது உங்களுக்கு உறுத்தவில்லையா? மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்க்கப்பட வேண்டுமெனில் இந்தக் கல்விக் கொள்கையாளர்கள் முழுவதுமாக அத்தகைய நிலையைக் கைக்கொள்ளட்டும். கல்வியில் மட்டுமல்ல - எல்லா நிலையிலும். . விரும்பும் உடையை, விரும்பும் பொருளை, விரும்பும் பாடப்பிரிவை, விரும்பும் துறையை, விரும்பும் துணையைத் தேர்ந்தெடுக்க, உரிமையை விட்டுக் கொடுக்க விரும்பாத நாம், கல்வி நிலையங்களில் மட்டும் விருப்பம் போல் நடந்து கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
அப்படியெனில் இனி 16-வயதில் வீட்டை விட்டு வெளியேற சுதந்திரம் கொடுப்போம்; 18-வயதில் துணையைத் தேட சுதந்திரம் கொடுப்போம்.
சானிட்டரி நாப்கினைக் கூட சங்கடத்தோடு மறைத்து விநியோகிக்கும் நாம், ஆணுறையைக் கூட அப்பட்டமாய் விநியோகிக்கும் நாடுகளைப் பார்த்து காப்பியடிக்க முயற்சிக்கிறோம். குழந்தை உரிமை என்ற பெயரில் குழந்தையின் இயல்புகளையே இழக்கச் செய்கிறோம்.
நான்
முன்னர் குறிப்பிட்டுள்ள இந்த உதாரண மாணவன் ஒன்றும் பிறக்கும் போதே இவ்வாறு இருந்து விடவில்லை. ஆனால் இந் நிலைக்குக் காரணம் உண்டெனில் அது நம்முடைய கல்விக் கொள்கை ஒன்றுதான் என்பேன். கட்டாயமாக அனைவருக்கும் கல்வியளிக்க வேண்டும் என விரும்பும் அரசும், கல்வியாளர்களும் அவ்வனைவருக்கும் தரமான கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என நினைப்பதில்லை.
இதில் தரம் என்பது இன்றைய சூழலில் மதிப்பெண்களாலும், தரநிலைகளினாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது அன்றி, மனப்பான்மையும் மாண்புகளும் மண்மூடிப் போய்விட்டன.
பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல ஒரு மாணவனைக் குறிப்பிடுங்கள் என்றால் நன்றாய்ப் படிக்கும் மாணவனைக் குறிப்பார்கள்; இன்று நன்றாய்ப் படிக்கும் மாணவர்கள் கூட நளினமாகக் கெட்ட வார்த்தைகளில் அசத்துகிறார்கள்.
எல்லோரும் கூறும் ஊடக வளர்ச்சியைப் பலிகடா ஆக்க மறுப்பதற்கில்லை, எனினும் முதற்காரணம் நமது அரசுகளும், கொள்கைகளும் தான் என்பேன். அதற்காக எங்கள் கைகளில் பிரம்பைக் கொடுங்கள் என்று கேட்கவில்லை; ஆனால் எங்கள் கைகளிலிருந்து பிரம்பைப் பிடுங்காதீர்கள் என்று கேட்கிறேன். காரணம், எங்கள் கைகளிலிருந்து பிரம்பைப் பிடுங்கப் பிடுங்க, போலீசின் கைகளில் லத்தியும், துப்பாக்கியும் வலுத்துக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இன்றைக்கும் கூட கல்வித்தரம், 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வு, நீட்டு -க்கு என்ன செய்ய என்று IIT, அண்ணா பல்கலைக்கழகம், ISRO என்று தானே ஆலோசனை கேட்கிறீர்கள்; அடிப்படையான ஆசிரியர்களை யாராவது நினைத்துப் பார்த்தீர்களா?
இன்னும் கூட Medical, Engneering, IAS, IPS என்று கல்விக்கு என்று ஒரு பட்சமான இலக்கைத் தானே நீங்கள் முன் வைக்கிறீர்கள். மனப்பான்மை சார்ந்த இலக்குகளை என்றைக்கு முன் வைக்கப் போகிறீர்கள்? சமூக மாண்புகளை என்றைக்கு நாம் இலக்காக்குவது? இயற்கையை நேசிக்கவும் ரசிக்கவும் தனியே டியூசன் வைக்க வேண்டுமா?
இதையெல்லாம் செய்யாமல் போனால் இன்னும் ஏழேழு நூற்றாண்டுகள் ஆனாலும் நாம் , "ஜப்பானைப் பார், அமெரிக்காவைப் பார், ஐரோப்பாவைப் பார்" என்று தான் உதாரணப்படுத்துவோம். அதுவரை நாம் இதே நாம் தான்.
இதையெல்லாம் தாண்டியும் உங்களில் சில கேள்விகள் எழலாம், "இத்தகைய சவால்களையெல்லாம் தாண்டியும் எத்தனையோ ஆசிரியர்கள் சாதிக்கவில்லையா? தம் சொந்தப் பணத்தில் பள்ளிக்கு வளர்ச்சிப் பணிகள் ஆற்றவில்லையா? வீதி வீதியாக, ஊர் ஊராகச் சென்று மாணவர்களைத் தேடவில்லையா?" என லாவகமாக வீசலாம். உண்மைதான்.
உள்ளன்போடு உழைக்கும் மகாத்மாக்கள் அவர்கள். மகாத்மா ஒருவர் தான்; அதுபோல்தான் இவர்களும் ஒன்றிரண்டு சதவீதம். உங்கள் கொள்கைகளைப் பெரும்பான்மையோருக்குத் தகுந்தாற்போல் வகுத்துக் கூறுங்கள். எங்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் அத்தியாவசியம்தான். எந்தக் கடையிலும் ஆசிரியருக்கென சலுகைப் பொருட்கள் வழங்கப் படுவதில்லை; எந்தப் பேருந்திலும் ஆசிரியருக்கென சிறப்பு அனுமதி இல்லை; எந்த மருத்துவமனையிலும் ஆசிரியருக்கான சிறப்பு மருத்துவத் திட்டம் இல்லை. எங்கள் பணத்தைப் பிடித்துக் கொண்டு, எத்தகைய மருத்துவக் காப்பீட்டை இந்த அரசு வழங்கி வருகிறது என்பது ஊருக்கே வெளிச்சம். காப்பீட்டுப் பணத்தில் மருத்துவம் பார்க்க வேண்டுமானால் எங்களுக்கு வரக்கூடாத நோய்களெல்லாம் வந்தாக வேண்டும்; அதிலும் சில லட்சங்கள் எங்கள் கைகளிலிருந்தே...
இதற்கு எதிர்மாறாக "மாணவர்களின் உதவித் தொகைகளைக் குறிவைக்கும் தலைமையாசிரியர்கள் இல்லையா? கண்ட நேரத்தில் கட்டுப்பாடில்லாமல் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் இல்லையா? பிஞ்சுப் பிள்ளைகளிடம் வக்கிரம் காட்டும் வாத்தியார்கள் இல்லையா?" எனவும் கேட்கலாம். இதற்கும் அதே பதில் தான். ஒரு சதவீத இத்தகையோரைக் களையெடுங்கள்; அவர்களுக்கான அங்கீகாரத்தையே அறுத்தெறியுங்கள். வேலையின்றி எத்தனையோ பேர் காத்துக் கிடக்கின்றனர். இந்தப் பணியில்லை, அத்தகையோர் எந்தப் பணியிலும் ஈடுபடாதவாறு தனிமைப் படுத்துங்கள்; அடுத்த தலைமுறை வரை அலைய விடுங்கள். அப்பன் சொத்தில் பங்கு வேண்டும், அவன் தப்பிலும் பங்கு கொடுங்கள். அதற்காக இத்தகையோரை முன்னிட்டு ஏனைய பெரும்பான்மையோரை அவமதிக்காதீர்கள், அவர்கள் உழைப்பை அர்த்தமற்றதாக்காதீர்கள்.
மீண்டும் சொல்கிறேன், உங்கள் கொள்கைகள் பெரும்பான்மையோரைக் குறித்து இருக்கட்டும். எங்களுக்கும் குடும்பங்கள் உண்டு, குழந்தைகள் உண்டு, குறைகளும் உண்டு.
இன்னும் கடைசியாய் ஒரு கேள்வி உங்களிடம் மிச்சமிருக்கும் , "உங்கள் பிள்ளைகளை மட்டும் ஏன் தனியார்ப் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்?" இதற்குப் பதில் தேட விரும்பினால் - மீண்டும் முதலிலிருந்தே தொடங்குங்கள்.
தனியாரிடமிருந்து மது விற்பனையை அரசு தனதாக்கிக் கொண்ட போதும், கல்வி மற்றும் சுகாதாரத்தைத் தன்னிடமிருந்து தனியாருக்குத் தாரை வார்த்த போதும் வாயையும், மற்ற எல்லாவற்றையும் சேர்த்துப் பொத்திக் கொண்ட நீங்கள், இன்று
'நீட்'டும் 'கேட்'டும் கொண்டு வந்து உங்களை நீங்களே தரப்படுத்திக் கொள்வதாகச் சாதிக்கப் பார்க்கிறீர்கள். உங்களைப்
பொறுத்தவரையில் உங்கள் பிள்ளைகள் பல லட்சங்களைச் செலவழித்தாவது, சில லகரங்களில் சம்பாதிக்க வேண்டும். ஒரே முதலீடு, ஒய்யார வாழ்க்கை.
உங்களைப் போல் தான் இந்த அரசும் கல்வியை லாபகரமற்ற தொழிலாகக் கைநெகிழ்ந்தது. எந்தக் கல்வி ஆலோசகராலும் கல்வியைப் பிற்காலத்திய முதலீடு என உணர வைக்க முடியவில்லை. இன்ஸ்டன்ட் உலகில் கல்வியின் பலனும் இன்ஸ்டன்ட்டாக எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் கண்மூடித்தனமான ஒரு பதிலை எதிர்பார்ப்பீர்களானால் இதோ -
எல்லா அரசு ஊழியரையும் - MP, MLA-க்களின் மகன், மகள், பெயரன், பெயர்த்தி உட்பட - அரசுப் பள்ளிக்கு அனுப்ப சட்டமியற்றுங்கள்.
எல்லாப் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக்கச் சட்டமியற்றுங்கள்.
அரசுப் பள்ளியினருக்கே அரசுக் கல்லூரிகளும் எனச் சட்டமியற்றுங்கள்.
அருகமைப் பள்ளிச் சட்டமியற்றுங்கள்.
கற்பித்தல் ஒன்றே ஆசிரியர் பணி என்றாக்குங்கள்.
அனைத்துப் பள்ளிகளையும் முதலில் தாய் மொழி வழிப்படுத்துங்கள்.
இதையெல்லாம் உங்களால் செய்ய முடியாது. காரணம் உங்களுக்கு குமாரசாமி போன்ற கணித மேதாவிகள் வேண்டும்; அம்பானிக்கு 500 ரூபாய் தண்டக் கட்டணம் வசூலிக்கும் நீதியரசர்கள் வேண்டும். எனவே அதுகாறும் எங்களாலும் அது முடியாது.
கடைசியா ஒண்ணு. ஆமா, அது என்ன - ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு - எனத் தனித்துப் பிரித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகின்றதே. ஏன் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இல்லையா? இல்லை அரசு ஊழியர்கள் என அழைக்கப்படத் தகுதியற்றவர்களா?
லாபக் கணக்கு பார்க்கும் உங்கள் மூளைகளைக் கொஞ்சம் சலவை செய்யுங்கள். கல்வி - வாழ்க்கைக்காக, சம்பாதிக்க அல்ல. நாங்கள் வாழக் கற்றுக் கொடுக்கிறோம், சம்பாதிக்க அல்ல. வாருங்கள், வேண்டுமானால் உங்களுக்கும் வாழக் கற்றுத் தருகிறோம்.
தொ.மைக்கிள் ஆன்றிலின்,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு
மேல்நிலைப் பள்ளி,
தோவாளை.
No comments
Post a Comment