TNPSC - நாளை குரூப் 2 தேர்வு 1,199 பதவிக்கு 6.20 லட்சம் பேர் எழுதுகின்றனர்: செல்போன், கால்குலேட்டருக்கு தடை
குரூப் 2 தேர்வு நாளை நடக்கிறது. 1199 பதவிக்கு நடக்கும் தேர்வை சுமார் 6.20 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு கூடங்களுக்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல
தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவியில் (நேர்முக பதவி தேர்வு) காலியாக உள்ள 1199 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியிட்டது. அன்று முதல்
தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. விண்ணப்பிக்க செப்டம்பர் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று சுமார் 6.26 லட்சத்திற்கும்
மேற்பட்டோர் போட்டிப் போட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2,268 தேர்வு மையங்களில் தேர்வு
நடக்கிறது.
சென்னையை பொறுத்தவரை 248 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு நடக்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. தேர்வு கண்காணிப்பு பணியில் மட்டும் 6 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட
உள்ளனர். மேலும் அதிரடி சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். தேர்வு மையங்களுக்கு பேஜர், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும், அனைத்து
மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment