School Morning Prayer Activities - 07.11.2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
உரை:
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..
பழமொழி :
Diamond cuts
diamond
முள்ளை முள்ளால் எடு
பொன்மொழி:
வாழ்வின் ரகசியம் என்பது -
நீ என்ன நினைக்கிறாயோ,
அதை
செய்யாமல்
இருப்பது அல்ல.
எதை
செய்யப் போகிறாயோ,
அதை
விரும்புவதுதான்.
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது
அறிவு :
1.வெள்ளை யானைகளின் நிலம்?
தாய்லாந்து
2.கடலின் ஆபரணங்கள்?
மேற்கிந்திய தீவு
நீதிக்கதை
நரியும் சின்ன முயலும்! - சிறுவர் கதை
(Fox and
Rabbit Story for Kids)
முன்னொரு காலத்தில் சாம்பல் நிற முயலும், தந்திரமான குள்ள நரியும் இருந்தன.
பருவநிலை மாறியது. விரைவிலேயே வந்துவிட்டது குளிர் காலம். பனிப்புயல் வீசியது. வானத்திலிருந்து சிறுசிறு பனித்துகள்கள் மழைபோல் கொட்டத்தொடங்கின. குளிரின் கடுமையால் முயலின் சாம்பல் நிறம் முற்றிலும் வெளுத்து, பனி வெண்மையானது.
‘இந்தக் குளிரைத் தாங்க முடியவில்லை. நான் அவசியம் ஒரு குடிசை கட்டிக்கொள்ளத்தான் வேண்டும்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது முயல்.
அது
கொஞ்சம் மரப்பட்டைகளைச் சேகரித்து வந்து வேலையைத் தொடங்கியது. வீடு கட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முயலைப் பார்த்து குள்ளநரி கேட்டது:’ அடேய், முயல் பயலே, நீ என்னதான் செய்துகொண்டிருக்கிறாய்?”
‘நீ பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய் குள்ளநரி அக்கா? நான் கதகதப்பாக வசிக்க ஒரு குடிசை கட்டிக்கொண்டிருக்கிறேன்.”
‘ஆமாம், ஆமாம். ரொம்ப நல்ல யோசனைதான்” என்ற குள்ளநரி, பிறகு தனக்குள் ரகசியமாகச் சொல்லிக்கொண்டது: “நாமும் ஏன் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடாது? ஆனால் நான் கட்டப்போகும் வீடு ஒரு பளிங்கு மாளிகையாக இருக்கும். ஆமாம், நான் ஒரு அற்புதமான பளிங்கு அரண்மனைபோன்று என் வீட்டைக் கட்டுவேன். முட்டாள்கள்தான் மரப்பட்டைகளால் வீட்டைக் கட்டுவார்கள். ஹா…ஹா…ஹா…’
பிறகு அந்தக் குள்ள நரி, பெரிய பெரிய பனிக்கட்டிகளைத் தூக்கிவரத் தொடங்கியது. ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் பனிக்கட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது.
இரண்டு வீடுகளும் ஒரே நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன. முயலும், நரியும் அதனதன் வீட்டிற்குள் குடிபுகுந்தன. குள்ளநரி தன் பனிக்கட்டி வீட்டின் சன்னலில் அமர்ந்தபடி முயலை உற்றுப் பார்த்து, “இந்த முயல் பயலைப்போல ஒரு மட சாம்பிராணி எங்காவது இருப்பானா!’ என்று நினைத்து கேலிச் சிரிப்புச் சிரித்தது. “இவன் நாகரிகம் தெரியாத நாட்டுப்புறத்தான்! போயும் போயும் அந்த மரப் பட்டைகளை வைத்து வீடு கட்டியிருக்கிறானே, என்ன ஒரு கோமாளித்தனம்! என்னுடைய வீடு தூய்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது. இது உண்மையிலேயே ஒரு பளிங்கு அரண்மனைதான். ராஜாக்களிடம்தான் இதுபோன்ற வீடு இருக்கும்.’
குளிர்காலம் இருக்கும்வரை நரிக்கு ஏதும் சிக்கலில்லை. இளவேனிற்காலம் வந்ததும்தான் தொடங்கியது பிரச்னை. அப்போது கதிரவன் வெப்பமாகப் பிரகாசிக்கத் தொடங்கினான். குள்ளநரியின் அரண்மனை உருகித் தண்ணீராக ஓடியது. வீடு இல்லாமல் இனிமேல் என்ன செய்யும் அந்த நரி? ஒருநாள் முயல் புல் மேய்வதற்காக வெளியே சென்றது. அந்த நேரம் பார்த்து நரி, முயலின் வீட்டிற்குள் நுழைந்தது.
முயல் அங்கங்கே புல் மேய்ந்துகொண்டே மெதுவாக வீட்டிற்குத் திரும்பியது. அது தன் வீட்டுக் கதவைத் தள்ளியது. ஆனால் திறக்க முடியவில்லை. அது மறுபடியும் கதவைத் தட்டத் தொடங்கியது.
‘ யார் அது?” குள்ளநரி கோபத்துடன் மிரட்டியது.
‘நரியக்கா, நான்தான் சாம்பல் நிற முயல் வந்திருக்கிறேன். கதவைத் திறங்கள்.”
‘சாம்பல் முயலாவது, சோம்பல் முயலாவது… யாராக இருந்தாலும் வெளியிலேயே கிட! ” குள்ள நரி சிடுசிடுப்புடன் சொன்னது.
சற்று நேரம் பொறுத்துப் பார்த்த முயல் மறுபடியும் சொன்னது: ‘நரியக்கா, உங்கள் கிண்டல் பேச்சைக் கொஞ்சம் நிறுத்துங்கள். என்னை உள்ளே விடுங்கள். நான் தூங்கவேண்டும்.”
ஆனால் தந்திரமான குள்ள நரி உறுமியது. ‘நான் உன்னை உதைத்து நொறுக்குவேன், அடித்து விளாசுவேன். முயலே, அதன் பிறகு உன்னைப் பழந்துணிபோல் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்துவிடுவேன்!”
முயல் அழுதுகொண்டே துயரத்துடன் அலைந்து திரிந்தது. வழியில் அது ஒரு ஓநாயைப் பார்த்தது. ‘முயலே, எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது ஓநாய்.
முயல் அழுதுகொண்டே சொன்னது: ‘என் நிலை உனக்கு வந்தால் நீயும்கூட இப்படித்தான் அழுவாய். எனக்கு மரப்பட்டைகளால் ஆன ஒரு வீடு இருந்தது. குள்ள நரிக்கு பனிக்கட்டியால் ஆன வீடு இருந்தது. அந்த நரியின் வீடு சூரிய வெப்பத்தால் உருகிக் கரைந்து காணாமல்போய்விட்டது. உடனே, நரி திருட்டுத்தனமாக என் வீட்டிற்குள் நுழைந்துகொண்டது. அது இப்போது என் சொந்த வீட்டிற்குள்ளேயே என்னை உள்ளே விடமாட்டேன் என்று மிரட்டுகிறது.”
‘நீ கொஞ்சம் பொறுமையாக இரு.” ஓநாய் சொன்னது. ‘நாம் இருவருமாகச் சேர்ந்து அதை வெளியே துரத்திவிடுவோம்.”
‘ அய்யோ உன்னால் முடியாது ஓநாய் அண்ணா, முடியவே முடியாது. அந்த நரி உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுள்ளது.”
‘அட! நான் என்ன செய்கிறேன் என்று நீ பார்க்கத்தானே போகிறாய். அதை நான் துரத்தியடிக்காவிட்டால் என் பெயர் ஓநாய் அல்ல! என் பெயரை சுண்டெலி என்று மாற்றி வைத்துக்கொள்கிறேன்.”
முயல் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. நரியை விரட்டியடிப்பதற்காக அவை இரண்டும் புறப்பட்டன. சற்று நேரத்தில் வீட்டையடைந்தன.
‘ஏய்… திமிர்பிடித்த நரியே, மரியாதையாக வெளியே வந்துவிடு!” ஓநாய் சத்தமாகச் சொன்னது. ஆனால் தந்திரமான நரி பதிலுக்கு மிரட்டியது: ‘ஓநாயே, நான் வெளியே வந்தேனென்றால் உன்னை அடித்துத் துவைத்துவிடுவேன், பின்னியெடுத்துவிடுவேன், அப்புறம் உன்னைக் கந்தல் கந்தலாகக் கிழித்து எறிந்துவிடுவேன்!”
‘அய்யய்யோ! நரி மிகவும் கோபமாக இருக்கிறது போலிருக்கிறது” என்று மெதுவாகச் சொன்ன ஓநாய், வாலைப் பின்னங்கால்களுக்குள் ஒடுக்கிக்கொண்டது. பிறகு பயத்தில் அலறியபடியே ஒரே பாய்ச்சலாக ஓடிச் சென்றது.
பிறகு எருது ஒன்று முயலைப் பார்த்தபோது கேட்டது: ‘நீ ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் சின்ன முயலே?”
முயல், எருதிடம் எல்லா விவரத்தையும் சொன்னது. முயலின் கதையைக் கேட்ட பிறகு சொன்னது எருது: ‘கவலைப்படாதே முயலே. நாம் இருவருமாகச் சேர்ந்து அந்த நரியை அங்கிருந்து விரட்டியடித்துவிடுவோம்.” முயல், ‘உன்னால் முடியாது” என்று தடுத்தும் கேளாமல் எருது நரி இருக்கும் வீட்டிற்கு வந்தது.
‘ஏய்… நரியே, வெளியே வா!” எருது அதிகாரமாக அழைத்தது. ஆனால் நரியின் மிரட்டலில் அதுவும் பயந்து ஓடி ஒளிந்தது. பிறகு, முயலுக்கு உதவுவதாகச் சொன்ன கரடியும், நரியின் வசவைக் கேட்டு பாய்ந்தோடிச் சென்றது. என்ன செய்வதென்று தெரியாமல் முயல் ஒரு மண்மேட்டின் மீது அமர்ந்து அழத் தொடங்கியது. அப்போது, வாள் ஏந்தியபடி வந்தது ஒரு சிவப்புக் கொண்டைச் சேவல். அது முயலிடம் கேட்டது:
‘முயலே! நீ எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்?”
தன்
கதையை மறுபடியும் சொல்லி அழுதது முயல்.
சேவல் சொன்னது: ‘கொஞ்சம் பொறு. நாம் இருவருமாகச் சேர்ந்து அந்த நரியை உன் வீட்டிலிருந்து விரட்டியடித்துவிடுவோம்.”
‘ஓ… சிவப்புக் கொண்டைச் சேவலே, உன்னால் அது முடியாது. முதலில் ஓநாய் வந்தது. நரிக்குப் பயந்து அது ஓடிவிட்டது. பிறகு எருது வந்தது. அதுவும் அஞ்சி நடுங்கி பாய்ந்தோடிவிட்டது. கரடியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது நீ எனக்கு உதவுகிறேன் என்கிறாய். நீயும் தோற்றுத்தான் போவாய்.”
‘சந்தேகப்படாதே முயலே. நாம் முயற்சி செய்து பார்க்கலாம்” என்றது சேவல். அவை இரண்டும் நரியை விரட்டியடிக்கப் புறப்பட்டன. முயலின் வீட்டை அடைந்ததும் சேவல் எழுச்சியான குரலில் பாடலொன்றைப் பாடியது:
‘செந்நிறக் கொண்டையன் தலையுயர்த்தி வருகிறான்!
பந்தாடப்போகிறான் பண்பற்ற நரியையே!வீட்டைத் திறந்து முயலையும் குடியேற்றப் போகிறான்!
நரித் தோலை உரித்து தோரணமும் கட்டுவான்!”
குள்ள நரி பயந்து நடுங்கியது. அது கெஞ்சும் குரலில் சொன்னது: ‘திரு செந்நிறக் கொண்டையன் அவர்களே, ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரே ஒரு நிமிடம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள் அய்யா! நான் என் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறேன்…”
ஆனால் சேவல் தொடர்ந்து வீரத்துடன் பாடியது:
‘சேவல் வருகிறான் வாள்கொண்டு!
இரு
துண்டாய் ஆகுமே உன் தலையும்!”
குள்ள நரி நைசாக கதவைத் திறந்தது. பிறகு விருட்டென்று தாவி ஓட்டம் ஓட்டமாக ஓடிப்போனது. அதன் பிறகு சேவலும் முயலும், அந்த வீட்டில் என்றும் இணைபிரியாத நண்பர்களாக வசித்தன.
இன்றைய செய்தி துளிகள்:
1.பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: டெண்டர் அறிவிக்க அரசாணை
2.சென்னையில் வெகுவாக குறைந்த சுற்றுச்சூழல் மாசு... மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்
3.கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு : 5-ல் 4 தொகுதியில் ம.ஜ.த. - காங்கிரஸ் வெற்றி
4.அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
5.நியூசி.,-க்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி : டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
No comments
Post a Comment