School Morning Prayer Activities - 27.11..2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
உரை:
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
பழமொழி:
Do not
oppose an unequal
ஈடாகாதவனை எதிர்க்காதே
பொன்மொழி:
மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை. பயம் என்னும் பெயரில் மனதிற்குள்ளேயே இருக்கிறது.
- பாரதியார்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது
அறிவு :
1.அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்?
திரிபுரா
2.கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன?
72
நீதிக்கதை :
மானுக்குக் கொம்பு அழகா?
குறிஞ்சிக் காட்டில் ஒரு மான் வசித்தது. அதற்கு மரம்போல கிளைகளுடன் கூடிய நீண்ட அழகான கொம்புகள் இருந்தன. அந்தக் கொம்புகள் மானுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுத்தன.
ஓநாய், கழுதைப்புலி போன்ற விலங்குகள்கூட மானின் நீண்ட கொம்புகளைக் கண்டு பயந்து விலகிச் சென்றன. அதனால் மற்ற மான்களைப்போலன்றி இந்த மான் காட்டில் தைரியமாகச் சுற்றி வந்தது. ஆனால் ஒரு நரிக்கு மட்டும் மானின் மீது பொறாமை வந்தது.
‘நானே இந்தக் காட்டில் பயந்து பயந்து வாழ்கிறேன். இந்த மான் தைரியமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறதே! எனக்கு இது அவமானம் அல்லவா?’ என்று நரி அடிக்கடி நினைத்துக்கொண்டது. மானின் அழகான கொம்புகளை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தது.
ஒருநாள் மான் தனியே புற்களை மேய்ந்துகொண்டிருந்தது.
அருகில் வந்த நரி, "நண்பனே, வெகுநாட்களாக உன்னைக் கவனித்து வருகிறேன். உன்னோடு நட்புகொள்ள விரும்புகிறேன்" என்றது.
"இந்தக் காட்டில் எனக்கு எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்கள். உன்னையும் நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன்" என்றது நற்குணம் கொண்ட அந்த மான்.
உடனே
நரி, "நாம் இன்று முதல் நண்பர்களாகிவிட்டோம் அல்லவா? உன் மீதான அக்கறையில் நான் ஒன்று சொல்கிறேன். கேட்பாயா?" என்றது.
"தாராளமாகச் சொல்!"
"உனக்கு நீண்ட கிளைகள் கொண்ட கொம்புகள் இருப்பதால் எவ்வளவு பெரிய அவமானம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, தெரியுமா? இந்தக் கொம்புகளால் உனக்கு ஆபத்தும் வர வாய்ப்பிருக்கிறது. இவை தேவைதானா?” என்று கேட்டது நரி.
"என்ன சொல்கிறாய்? பலரும் எனக்கு இந்தக் கொம்புகள் அழகாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். நீ இப்படிச் சொல்கிறாயே?" என்று கேட்டது நரியின் பொறாமைக் குணத்தை அறியாத மான்.
"மற்றவர்களுக்கு உன் மீது அக்கறை இல்லை. அதனால்தான் உன்னை அவர்கள் புகழ்கிறார்கள். உன் மீது உண்மையான அக்கறை இருப்பதால்தான் சொல்கிறேன், உனக்கு இந்தக் கொம்புகள் வேண்டாம். இவற்றை உடைத்துப் போட்டுவிடு!”
“இந்தக் கொம்புகளால் எனக்கு எப்படி அவமானம் வரும்? எப்படி ஆபத்து வரும்?”
“பறவைகள் உன் கொம்புகள் மீது அமர்ந்து உல்லாசமாகப் பயணிக்கின்றன. நீயும் அடிமைபோல அவர்களைத் தூக்கிச் செல்கிறாய். உனக்கு இது அவமானம் அல்லவா? விலங்குகள் உன்னைத் துரத்தும்போது உன் நீண்ட வளைந்த கொம்புகள் ஏதேனும் முட்புதரில் சிக்கிக்கொள்ளலாம். அப்போது உன்னால் ஓடித் தப்பிக்க முடியுமா? அதனால்தான் இந்தக் கொம்புகளை உடைத்துப் போடு என்றேன்" என்றது நரி.
நரியின் பொய்யான அக்கறையை உண்மை என்றே நினைத்தது மான். அது நரியிடம், "நீ சொல்வது உண்மைதான். கொம்புகளால் எனக்கு அவமானமும் ஆபத்தும் இருக்கிறது என்றால், நீயே கொம்புகளை உடைத்துவிடு" என்றது.
"சற்றுப் பொறு. மலையடிவாரத்துக்குச் சென்று கூரான கல் ஒன்றை எடுத்துவருகிறேன்" என்று ஓடியது நரி.
சற்று நேரத்தில், "ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள்… என்னைக் காப்பாற்றுங்கள்" என்று குரல் வந்தது.
அந்தக் குரல் மானின் காதுகளிலும் விழுந்தது. அது குரங்கு, முயல் உள்ளிட்ட விலங்குகளையும், பறவைகளையும் அழைத்துக்கொண்டு மலையடிவாரத்துக்கு ஓடியது.
அங்கே நரி ஒரு புதைகுழியில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.
யாருக்கும் புதைகுழியில் இறங்கி நரியைக் காப்பாற்றத் துணிவில்லை. ஆனால் நற்குணம் கொண்ட மானுக்கு மட்டும் ஒரு யோசனை தோன்றியது. அது உடனே புதைகுழியின் கரையோரத்துக்குச் சென்றது. அங்கே மண்டியிட்டு தன் தலையைத் தாழ்த்தி, நீண்ட கொம்புகளை நரியின் பக்கம் நீட்டியது.
மெதுவாக மானின் கொம்புகளை நோக்கி நகர்ந்த நரி, தன் முன்னங்கால்களால் கொம்புகளைப் பிடித்துக்கெண்டது.
மற்ற
விலங்குகள் மானைப் பிடித்து பின்னால் இழுத்தன. நரியும் மெல்ல மெல்ல புதைகுழியை விட்டு வெளியே வந்து கரையேறியது.
புதைகுழியிலிருந்து வெளியே வந்த பிறகுதான் நரிக்கு நடுக்கம் நின்றது. கூடவே மானின் உயர்ந்த உள்ளம் புரிந்தது. மானின் நீண்ட கொம்புகள்தான் தன் உயிரைக் காப்பாற்றியது என்பதையும் அது புரிந்துகொண்டது.
நரி
மானிடம், "உன் நீண்ட கொம்புகள் மீது எனக்குப் பொறாமை இருந்தது. அதனால்தான் அதை நான் உடைத்துப்போடு என்றேன். அவற்றை உடைக்க கல் தேடிவந்தபோது புதைகுழியில் மாட்டிக்கொண்டேன். ஆனால் இப்போது உன் கொம்புகளே என் உயிரைக் காப்பாற்றியது. என்னை மன்னித்துவிடு. உண்மையிலேயே உனக்கு இந்தக் கொம்புகள் அழகையும் கம்பீரத்தையும் தருகின்றன!" என்றது.
மான்
புன்னகை செய்துவிட்டு, கம்பீரமாக நடந்து சென்றது.
இன்றைய செய்தி துளிகள் :
1.2022-ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: பிரதமர் மோடி வாக்குறுதி
2.அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு...? - அமைச்சர்
செங்கோட்டையன் ஆலோசனை
3.புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூரில் நாளை முதல்வர் ஆய்வு
4.அரசு இல்லங்களில் குடியேறும் உயர் பதவிகள் வகிப்போரின் வீடுகளுக்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு உயர்வு
5.ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 4வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்: பைனலில் இங்கிலாந்தை வீழ்த்தியது
No comments
Post a Comment