இந்த தீபாவளி, எங்களுக்கு கறுப்பு தீபாவளி சத்துணவு ஊழியர் ஸ்டிரைக் தொடர்கிறது
சத்துணவு ஊழியர் போராட்டம் தொடரும்; இந்த தீபாவளி, எங்களுக்கு கறுப்பு தீபாவளி, என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பொதுச் செயலர், நுார்ஜஹான் தெரிவித்தார்.
சென்னையில், அவர் கூறியதாவது:சத்துணவு ஊழியர்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டு, 35 ஆண்டுகளாகியும், வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.அவற்றை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அக்., 29ம் தேதி முதல், வேலை நிறுத்தம், தொடர் மறியல் போராட்டத்தை துவக்கினோம்.நேற்று முன்தினம், அமைச்சர் சரோஜா, அரசு செயலர் மற்றும் அதிகாரிகள், பேச்சு நடத்தினர். அவர்களிடம், கோரிக்கை வைத்தோம்.
அவர்கள், 'நிதி
பற்றாக்குறை இருப்பதால், எதுவும் செய்ய இயலாது' என்றனர். 'முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்' என, கோரினோம். 'உங்கள் கோரிக்கையை, முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்கிறோம்' என, அமைச்சர் கூறினார்.நேற்று மாலை, அரசு செயலர் பேச்சு நடத்த அழைத்தார். 'குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய உணவுப்படியை, உயர்த்தி வழங்குகிறோம் ' என்றார்.'எங்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி கொடுங்கள்' என, வலியுறுத்தினோம்.
அரசிடம், சிறு அசைவு கூட ஏற்படவில்லை. இதனால், இந்த ஆண்டு தீபாவளி, எங்களுக்கு கறுப்பு தீபாவளியாக உள்ளது. எங்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.இவ்வாறு நுார்ஜஹான் கூறினார்.
No comments
Post a Comment