ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
வால்பாறை அருகே, மாணவர்களே இல்லாத பள்ளியில், தலைமை ஆசிரியை
உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர்.
கோவை
மாவட்டம், வால்பாறை ஒன்றியம், சின்னக்கல்லாரில், ஆதிதிராவிடர் அரசு நலப் பள்ளி, 1943ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, இந்தப் பள்ளியில், ஒரே ஒரு மாணவிக்காக, ஒரு தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள் பணியாற்றினர். அந்த மாணவி, இந்த கல்வியாண்டில் சின்கோனா இரண்டாம் பிரிவு அரசு நலப் பள்ளியில், நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
இருந்த ஒரே மாணவியும், வேறு பள்ளிக்கு சென்ற நிலையில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என இருவர் மட்டும், தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவர்களை, தேவை இருக்கும் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யாததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தி கூறுகையில், ''மாணவர்கள் இல்லாததால், பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம். ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்வது குறித்து, கல்வித் துறைக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியை நிரந்தரமாக மூடுவது குறித்து, சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
No comments
Post a Comment