இந்த நேரத்துல பண்ணாம வேற எப்போ பண்ண போறோம்?’ - நெகிழவைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்
கஜா
புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் வகையில் ஆசிரியர் ஒருவர் ஜூனியர் ரெட்கிரஸூடன் இணைந்து நிவாரண உதவிகளை
செய்துவருகிறார்.
கஜா
புயலின் கோரப் பசிக்கு டெல்டா மாவட்டங்கள் இரையாகியுள்ளன. மின்சாரத்தை பார்த்தே 5 நாள்கள் ஆகிவிட்டதால் விடியலை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர் அம்மக்கள். உண்ண உணவு, குடிக்க நீர்கூட இல்லாமல் இழப்புகளை சுமந்துகொண்டே நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.
இதோ
உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்றபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிக்கரம் நீண்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில்,
``நாள்தோறும் 2,000 பேருக்கு உணவு வழங்குகிறோம் என்றபடி பேச்சைத் தொடங்கினார் அந்த அரசுப்பள்ளி ஆசிரியர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் செல்வம்.
ஜூனியர் ரெட்கிராஸில் இணைந்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க உதவிக்கரம் நீட்டிவருகிறார். அவரிடம் பேசினோம். ``முத்துப்பேட்டையில் உள்ள பெரும்பாலான ஓட்டுவீடுகள், கூரை வீடுகள் கஜாவின் சீற்றத்தால் காணாமல் போய்விட்டன. ஒரு தென்னை மரம் வளர 8 ஆண்டுகள் ஆகும்னு சொல்றாங்க. 100 மரங்கள் இருந்த எடத்துல 5 மரங்கள்தான் இருக்கு. மக்களோட வாழ்வாதாரம் முழுசா போச்சு. கிராமத்தில் இருக்குறவங்க பலபேருக்கு இப்போ வீடே இல்ல. நாங்க இருக்குற ரெட் கிராஸோட `கலாம் கனவு இயக்கம் ’ கைகோத்து இருக்கு. ஒரு நாளைக்கு 2,000 பேருக்கு உணவு வழங்கிட்டு வர்றோம்.
5 நாளா மக்களுக்கான உணவு வழங்கிட்டு வர்றோம். ஒருத்தரால மட்டும் இத செய்ய முடியாது. சமூக சேவை செய்ற சிலரும் கூட இணைஞ்சுருக்காங்க. த.மு.மு.க-வுல இருந்து ஆம்புலன்ஸ் ஒண்ணு ரெடியா இருக்கு. மற்ற மாவட்டங்களிலிருந்து வரும் நிவாரண பொருள்களையும் மக்களுக்கு வழங்கிவருகிறோம். ஊராட்சி ஒன்றிய பள்ளில நிரந்தரமா உணவு தயாரிச்சு வழங்குறோம்.
அதுமட்டுமில்லாம, பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியா சென்றும் உணவு வழங்குறோம். அதேபோல, வெளியூர்ல இருந்து வர துப்புரவு பணியாளர்கள், மின்சார ஊழியர்கள், மீட்புப் பணியில இருக்குறவங்களுக்கு உணவு வழங்கிட்டு வர்றோம். இந்த நேரத்துல பண்ணாம வேற எப்போ பண்ணப் போறோம். எல்லோரும் சேர்ந்து களத்துல இறங்கணும். முடிஞ்ச அளவு மற்ற மாவட்டத்துல இருக்குற மக்கள் தமிழ்நாட்டுக்கே சோறு போட்ற டெல்டா மக்களுக்கு உதவ முன்வரணும்” என பேசி முடித்தார்.
No comments
Post a Comment