Header Ads

Header ADS

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கூடுதல் மதிப்பெண்கள்: குறைகிறதா கல்வியின் தரம்?

Image result for PUBLIC EXAM


 
 பொதுத் தேர்வு முடிவுகளில் மாநிலத்தின் முதல் 10 இடங்களைப் பிடிப்பதற்காக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால், ஒரு சில பள்ளிகளில் சராசரி தேர்ச்சியை அதிகரித்துக்காட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகளில் மதிப்பெண்களை கூடுதலாக அளித்து மதிப்பெண் பட்டியலை கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவதால் கல்வியின் தரம் குறைக்கப்படுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாநில கல்வித் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வி இயக்குநரகம் மூலம் எடுத்து வருகின்றனர். இதனால் தேர்ச்சி சதவிகிதம் குறைந்த மாவட்டங்களான வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ளுதல், ஆசிரியர்களின் கூட்டத்தைக் கூட்டி மாத அளவிலான தரமேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் முதல் முதலாக பொதுத் தேர்வு மாணவர்களுக்காக காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 10-ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும், 10-ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும் அவர்களது பள்ளி மாணவ, மாணவிகளின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களுடன் கூட்டத்துக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.
 
தனியே மூத்த தலைமை ஆசிரியர்கள் மூவரைக் கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் ஏதாவது ஒரு விடைத்தாளை எடுத்து திருத்தியது சரியான முறையில் உள்ளதா?, விடைக்கேற்ற மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதே முறை வேலூர் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் வேலூர் கல்வி மாவட்டத்துக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கூட்டம் வேலூரில் நடந்தபோது ஒரு பள்ளி ஆசிரியர், மாணவர் எடுத்த மதிப்பெண்களைவிட கூடுதலாக மதிப்பெண்கள் போட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட ஆசிரியர் கண்டிக்கப்பட்டார். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து இக்கூட்டம் அரக்கோணம் கல்வி மாவட்ட அளவில் அரக்கோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திருமால்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் தமிழ் விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் அவை மாணவர்களாலேயே 2 விதமான பேனாக்களால் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட ஆசிரியர், மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால், இது கல்வி அலுவலர்களுக்கு தெரியவந்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற பயத்தில் தேர்வு தினத்துக்குப் பிறகு ஒரு நாளில் தன் வகுப்பில் இருந்த 20 மாணவர்களிடம் வெள்ளைத் தாளை அளித்து சரியான பதிலை எழுதித் தருமாறு வாங்கி அதை காலாண்டுத் தேர்வு விடைத்தாளோடு சேர்த்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் இந்த தவறு தெரியவந்ததை அடுத்து குறிப்பிட்ட ஆசிரியரைக் கண்டித்த முதன்மைக் கல்வி அலுவலர், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்ற தவறு ஏதும் வேலூர் மாவட்டத்தில் நடக்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.
 
மேலும் அரக்கோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பேசும்போது கற்பித்தலின் திறனை ஆசிரியர்கள் அதிகரித்துக்கொள்ள வேண்டிய அவசியம் வந்துவிட்டது என பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார்.

தற்போது இதுபோன்று தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க மதிப்பெண்களை கூடுதலாக ஆசிரியர்கள் அளிக்கும்போது தேர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வேண்டுமானால் நிறைவேறலாம், ஆனால் மாணவர்களின் கல்வித் தரம் குறையும் என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


 
இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

பொதுத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும்போது அம்மையத்துக்கு வரும் கல்வி அலுவலர்கள், மதிப்பெண்கள் குறைவாக பெற்றுள்ள மாணவர்களுக்கு சற்று கூடுதலாகப் போட்டு அவர்களை தேர்ச்சி அடைய செய்யுங்கள். மாவட்டத்தின், மாநிலத்தின் தேர்ச்சியை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம் நமக்குள்ளது என தெரிவித்தார். அப்போது நாங்கள் அவர்கள் கூறியபடி அதைச் செய்தோம். இப்போது ஆசிரியர்கள் அவர்களாகவே அதைச் செய்துள்ளனர். இதில் தவறு எங்கே இருக்கிறது என்றார்.
 
ஆசிரியர்களும் அலுவலர்களும் தவறு எங்கே இருக்கிறது எனப்  பார்க்காமல் மாவட்டத்தின் பெயரை, மாநிலத்தின் பெயரை உயர்த்திக்காட்டுவதாக கருதி மாணவர்களின் கல்வித் தரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெளிவாகத் தெரிகிறது.

எனவே கல்வித் துறை அலுவலர்களும், ஆசிரியர்களும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மாணவ, மாணவிகளுக்கு நன்முறையில் கற்பித்து அவர்களின் கற்றல் திறனை மேன்மையடைய செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.