கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, November 25, 2018

கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள்


ஈரோடுகணினி அறிவியல் பாடத்தில் தமிழக அரசு பள்ளிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் தற்போது

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய  பாடங்கள் உள்ளன. இதே பாடப்பிரிவுகள்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளிலும் உள்ளது. மேல்நிலை பள்ளிகளில் அதாவது பிளஸ் 1 வகுப்பு சேரும்போது மட்டுமே கம்ப்யூட்டர் தொடர்பாக படிக்க கம்ப்யூட்டர் சயின்ஸ்  என்ற தனி குரூப் உள்ளது. 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்த அறிமுகம் இணைப்பு பாடமாக மட்டுமே உள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் கணினி பயன்பாடு இல்லாத இடங்களே  இல்லை. ஆனாலும், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் எட்டாக்கனியாகவே உள்ளது. எல்லா மாணவர்களும் கணினி அறிவு பெறவேண்டும் என்ற நோக்கில், கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் பாடத்திட்டம்  கொண்டுவரப்பட்டது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு, கணினி அறிவியல் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன. ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு அரசியல்  காரணங்களுக்காக சமச்சீர் பாடத்திட்டத்தில் இருந்து கணினி அறிவியல் பாடத்தை எவ்வித காரணமும் இன்றி நீக்கிவிட்டது. இதனால் பல லட்சம் செலவிட்டு அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் குப்பையில்  வீசப்பட்டன. அதேசமயம், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலும், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஒரு தனிப்பாடமாக உள்ளது. அண்டை மாநிலம் மற்றும் தனியார்  பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கணினி அறிவு இல்லாமலேயே தங்களது பள்ளிக்கல்வியை தொடர்கின்றனர். கணினி குறித்த அடிப்படை அறிவுகூட இவர்களுக்கு  புகட்டப்படவில்லை. கணினி பற்றிய தகவல் தெரியவேண்டுமானால், மேல்நிலை பள்ளிகளில் மட்டுமே தெரிந்துகொள்ளவேண்டிய நிலை உள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்க செய்யும் செயலாகவே உள்ளது  என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 
இதுகுறித்து தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஜமுனாராணி கூறியதாவது: அண்டை மாநிலமான கேரளாவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வி  நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் என்பது கேரளாவில் 1ம் வகுப்பில் இருந்தே உள்ளது. ஆனால், தமிழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற பாடப்பிரிவு 11ம் வகுப்பில்தான் உள்ளது. கணினி  அறிவியல் பாடத்தில் பின்தங்கி இருப்பதால்தான் நமது மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்அரசு பள்ளிகளில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழகத்தில் உயர்நிலை பள்ளிகளாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட 700 மேல்நிலை பள்ளிகளில் இன்னும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்படவில்லை. இதேபோல், 850  மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் காலிப்பணிடம் நிரப்பப்படாமல் உள்ளது. பள்ளிகளில் ‘’ஸ்மார்ட் கிளாஸ்’’ திட்டமும் முழு வீச்சில் துவங்கப்படவில்லை. ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு மட்டுமே  மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் குறித்த அறிவை தராது. கணினி அறிவியலை, தனிப்பாமாக கொண்டுவந்தால் மட்டுமே நம் மாணவர்களால் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட முடியும். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள  முடியும். 12ம் வகுப்பு முடித்த பிறகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. அதுவும், எப்படி பயன்படுத்த வேண்டும் என சொல்லிக்கொடுப்பது இல்லை. கணினி அறிவியல் பாடத்தில்  இப்படி பின்தங்கியிருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு ஜமுனாராணி கூறினார்.

Image may contain: text

No comments: