Header Ads

Header ADS

பேச்சுத்திறன் குறைபாடு உடையோர்களுக்காக நாம் கடைபிடிக்க வேண்டியவை என்ன..?! #ISAD



அக்டோபர் 22, `சர்வதேசப் பேச்சுத்திறன் குறைபாடு நோய் விழிப்புஉணர்வு தினம்' (International Stuttering Awareness Day - ISAD). ஒரு குழந்தை பிறந்ததும், அதன் கேட்கும் திறன், குரல் ஆகிய விஷயங்களில் அக்கறை காட்ட வேண்டும். வளர வளரப் பேச ஆரம்பித்துவிடும் எனக் கண்டுகொள்ளாமல் விடுவதால், பல குழந்தைகள் பேச்சுக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து, குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன், பல தகவல்களைப் பகிர்கிறார்.
 
"குழந்தைகளுக்குக் காது கேட்கிறதா என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும். பேச்சுத்திறனில் குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்குக் கேட்கும் திறனிலும் பிரச்னைகள் இருக்க வாய்ப்புண்டு. அதனால், எல்லாக் குழந்தைகளுக்கும், டெரா (DERA) பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். OAE என்கிற பரிசோதனையையும் மேற்கொள்ளலாம். இந்தப் பரிசோதனையைப் பிறந்த ஒருநாள் குழந்தைக்கும் எடுக்கலாம்.

குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில், சத்தத்துடன் சிரிக்க ஆரம்பிக்கும். அதுதான் குழந்தைகளின் முதல் பேச்சு. திடீர் திடீரென எச்சில் வடிய சத்தமாகச் சிரிப்பார்கள்.

மூன்றாவது மாதத்தில், `... நா..' என ஒற்றை வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பிக்கும். இந்த வார்த்தைகளை உச்சரிக்கப் பழக்கப்படுத்துவது பெற்றோரின் கடமை.

நான்காவது மாதத்தில், `ம்ம்.. கா' எனச் சத்தமாகச் சிரித்துக்கொண்டே பேச ஆரம்பிக்கும். கண்ணாடியைப் பார்த்து ஏதாவது பேசி சிரிக்கும்.

ஏழாவது மாதத்தில், `ப்ப்பா.. க்கா..' என வார்த்தைகளைச் சேர்த்துப் பேசும். முதலெழுத்தை விழுங்கி, `ப்பா' எனக் கூறும்.

எட்டாவது மாதத்தில், இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து, `தாதா.. பாபா.. மாமா..' எனப் பேச ஆரம்பிக்கும்.

ஒரு வயதில், அர்த்தமுள்ள வார்த்தைகளைப் பேசும். உதாரணமாக, `அம்மா, அத்தை, அப்பா' எனத் திருத்தமாக உச்சரிக்கும்.

ஒன்றரை வயதில், 10 வார்த்தைகள் வரையில் மழலையில் பேச ஆரம்பிப்பார்கள்.

இரண்டு வயதில், நாம் சொல்வதைத் திரும்பச் சொல்வார்கள். அதன்பின்னர், பேச்சுத் தெளிவாக வர ஆரம்பித்துவிடும்.

மூன்று வயதில், பாட்டுப் பாட ஆரம்பித்துவிடுவார்கள். கிட்டத்தட்ட 250 வார்த்தைகள் வரையில் பேசுவார்கள்.

மருத்துவர் கண்ணன்குழந்தை திக்கிப் பேசுவது, மழலையில்தான் ஆரம்பிக்கிறது. இதைப் போக்க, `ஸ்பீச்தெரபி' மிகச்சிறந்த மருந்து. பேசுவதற்குப் பயிற்சி அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். திக்கிப் பேசுதல் குணப்படுத்த முடியாத பிரச்னை கிடையாது. முறையான பயிற்சியைச் சரியான காலத்தில் மேற்கொண்டால், திக்குவதைத் தவிர்க்கலாம்.

`டங்க் ட்விஸ்டர்' எனச் சொல்லக்கூடிய 'நா சுழற்சி' பயிற்சியினை, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தொடர்ச்சியாகவும் சத்தமாகவும் வாசிக்கச் செய்து பயிற்சி அளிக்கலாம்.

வீட்டில் அடிக்கடி குழந்தைகளிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். பெற்றோர்களின் பயிற்சியும் அவசியம். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிடும் நிலையில், குழந்தை  பேசுவதற்கு முறையான பயிற்சி அளிக்காத சூழலில் இப்பிரச்னை ஏற்படலாம். அக்கா, அண்ணன் என உடன்பிறந்தவர்கள் இருந்தால், அவர்கள் பேசுவதைக் கவனித்து இவர்கள் பேசத் தொடங்கிவிடுவார்கள்.

பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளைப் பராமரிக்க சில டிப்ஸ்:

1. `நீ பேசவே மாட்டேங்கிறே' எனக் குழந்தைகளின் தன்னம்பிக்கையை உடைக்காமல், `உன்னால் முடியும்' என்கிற நம்பிக்கையை விதையுங்கள்.

2. சத்தான உணவுகள், உடற்பயிற்சி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

3. பக்கத்தில் இருப்பவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக, அமைதியாக இருக்க நினைப்பார்கள். அதை உடைத்து, அவர்களைப் பேசவையுங்கள்.

4. பேச்சுத்திறன் குறைபாட்டினால் எந்தச் சூழலிலும் குழந்தை மன அழுத்தத்துக்கு ஆளாகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

5. வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்துங்கள். நிறைய புத்தகங்களை வாங்கிக்கொடுத்து, சத்தமாக வாசித்துக் காட்டச் சொல்லுங்கள்.

6. வேகமாகவும் தொடர்ச்சியாகவும் பேச நிர்பந்திக்காமல், இயல்பாக குழந்தை பேசி முடிக்கும் வரை புன்சிரிப்புடன் கேளுங்கள்.

7. வெளியிடங்களில் உங்கள் குழந்தையின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி பரிவு காட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது உங்களுடைய குழந்தைக்கு ஆபத்தாக மாறலாம்.

8. எந்த இடத்திலும் உங்களுடைய குழந்தை பேசுவதை ஊக்குவித்துப் பழகுங்கள்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.